உ.பியில் கார் மீது லாரி மோதி பயங்கர விபத்து: 8 பேர் பலி- பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு..!!
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஷிவ்நகரில் உள்ள மஹூவாரா பகுதியில் நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்றுவிட்டு 11 பேர் காரில் மஹ்லா கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, ஜோகியா உதய்பூர் பகுதியில் உள்ள கத்யா கிராமம் அருகே அதிகாலை 1 மணியளவில் கார் எதிரே சென்ற லாரி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 3 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறந்தவர்கள் சச்சின் பால் (16), முகேஷ் பால் (35), லாலராம் பாஸ்வான் (26), ஷிவ் சாகர் (18), ரவி பாஸ்வான் (19), பிந்து குப்தா (25), ராம் பரன் (35), மற்றும் ஓட்டுநர் கவுரவ் மவுரியா (22) என அடையாளம் காணப்பட்டனர்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, சாலை விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சையை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன் நிவாரணமும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த் நகரில் நடந்த சாலை விபத்து மிகவும் வேதனையானது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல். இந்த மகத்தான துயரத்தைத் தாங்கும் வலிமையை கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும்.
மேலும், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.