கேரளா வரதட்சணை வழக்கு- கணவர்தான் குற்றவாளி என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!
கேரளாவில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா விவகாரத்தில் அவரின் கணவர்தான் குற்றவாளி என கொல்லம் கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பின் முழு விவரங்கள், நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கேரள மாநிலத்தில் ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா, கிரண் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்திற்கு வரதட்சனையாக 1 ஏக்கர் மதிப்பிலான ரப்பர் தோட்ட நிலம், 100 பவுன் நகை, ரொக்கம் என வழங்கப்பட்டது. இருப்பினும் மேலும் வரதட்சணை கேட்டு கணவர் விஸ்மயாவை மோசமாக துன்புறுத்தினார். இதையடுத்து அவர் கடந்த ஜூன் மாதம் குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து கிரண் மீது விஸ்மயா குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இவ்விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, வரதட்சணைக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட கிரண் குமார், இந்திய அரசியலமைப்பு சட்ட 304 பி (வரதட்சணை கொடுமையால் மரணம்), 498 ஏ (கணவர் அல்லது உறவினரால் கொடுமைப்படுத்தப்படுவது), 306 (தற்கொலைக்கு தூண்டுதல்), 506 (மிரட்டல் விடுவது) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்டார்.
கடந்த 1 வருடமாக நீதிமன்ற காவலில் உள்ள கிரண் குமாரின் ஜாமீன் மனு பலமுறை நிராகரிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதம் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு கேரள மாநிலம் கொல்லம் கீழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கின்போது 42 சாட்சியங்கள், 108 ஆவணங்கள் மற்றும் விஸ்மயாவின் செல்போன் உரையாடல்கள் ஆகியவற்றை விசாரணை அறிக்கையாக ஏற்றுகொள்ளப்பட்டது. மேலும் இந்த வழக்கு குறித்து காவல்துறையினர் 507 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். அதைத்தொடர்ந்து அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார்.
அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
போலீஸாரின் சாட்சியங்கள், மருத்துவ பரிசோதனை அடிப்படையில் `விஸ்மயாவின் கணவர் கிரண் குமார் தான் குற்றவாளி என உறுதியாகிறது. வரதட்சணை கொடுமை, உடல் அல்லது மனநலப் பாதிப்பை ஏற்படுத்துதல், தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கிரண் குமார் குற்றவாளி என தீர்ப்பளிக்கபடுகிறது. தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டது. இதைதொடர்ந்து கிரணின் ஜாமீன் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு நடந்தபோது இறந்த பெண் விஸ்மயாவின் தந்தை திரிவிக்ரமன் நீதிமன்றத்தில் இருந்தார். அவர் `கிரணுக்கு மிக அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த தண்டனை, இந்த சமூதாயத்துக்கான பாடமாக இருக்க வேண்டும்’ என்று நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.