தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் குறும்படங்கள் படப்பிடிப்புக்கு அனுமதியில்லை!!
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் நிர்வாகத்தின் அறிவுறுத்தலையும் மீறி குறும்படப் பிடிப்பில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரின் வருகைக் கண்டு தப்பித்துள்ளனர்.
தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் திருமண நிகழ்வுகள் மற்றும் சடங்குகள் தவிர்ந்த ஏனையவற்றுக்கு படப்பிடிப்பில் ஈடுபட அனுமதிக்கப்படுவதில்லை.
இந்த நிலையில் ஆலய வளாகத்துக்கு இன்று மாலை வருகை தந்த ஒரு குழுவினர் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர். நிர்வாகத்தினர், அவர்களிடம் விசாரித்த போது, தாம் குறும்பட பிடிப்பில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளனர்.
எனினும் அதற்கு அனுமதியளிக்க முடியாது என்று நிர்வாகத்தினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். அதனையும் மீறி அந்தக் குழுவினர் படப்பிடிப்பில் ஈடுபட்டதனால் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டது.
ஆலய வளாகத்துக்கு பொலிஸார் வருகை தருவதனை அவதானித்த அந்தக் குழுவினர் அங்கிருந்து தப்பித்தனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் குறும்படங்கள் படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கப்படாது எனவும் அனைவரும் அதனை பின்பற்றவேண்டும் என்றும் ஆலய நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”