’சிவப்பு சட்டை போட்டால் ஜே.வி.பியா?’
கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை தொடர்பில் கைது செய்யப்பட்ட பெரும்பான்மையானவர்கள் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அங்கத்தவர்கள் என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ள கட்சியின் பிரசார செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், ஜே.வி.பிக்கு எதிராக சிலர் அரசியல் சூனிய வேட்டையில் ஈடுபட்டு வருவதாகவும், அரசியல் பழிவாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தினார்.
ஜே.வி.பியினர் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பொலிஸ்மா அதிபரை, இன்று (23) சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஜே.வி.பி.யை சேர்ந்தவர்கள் அல்ல என்பதும் பெரும்பான்மையானவர்கள் ஏனைய அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இவ்வாறான அறிக்கை தொடர்பில் தான் அவதானிப்பதாக பொலிஸ் மா அதிபர் கூறியதாகவும் ஹேரத் எம்.பி தெரிவித்தார்.
இதேவேளை, சிவப்பு சட்டை அணிவதால் மட்டும் ஒரு தனிநபரை ஜே.வி.பி ஆதரவாளராக மாற்ற முடியாது என்று தெரிவித்த ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, இந்த அமைதியின்மையில் ஜே.வி.பியின் கரம் விளையாடுவதாக சமூக ஊடகங்கள் ஊடாக சமூகத்தில் ஒரு கருத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.