’மோசமான பின்னடைவை இலங்கை சந்திக்கும்’ !!
“இலங்கை வரலாற்றில் இதுவரையில் பதிவாகியிராத மிகவும் மோசமான பின்னடைவை இலங்கை பதிவு செய்யும் என நாம் எதிர்பார்க்கின்றோம்“ என்று தெரிவித்த இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, அடுத்த மூன்று முதல் ஆறு மாத காலப்பகுதிக்கு எம்மால் சாதாரண இறக்குமதிகளை மேற்கொள்ள முடியாது“ என்றும் தெரிவித்தார்.
மேலும், “தொழிற்றுறைகள் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு போதியளவு மூலப்பொருட்கள் கையிருப்பில் இல்லை என தெரிவிக்கின்றன.” எனவும் ஆளுநர் தெரிவித்தார்.
“தற்போதைய பொருளாதார சூழ்நிலை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள்” எனும் தலைப்பில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் தெரிவித்த அவர், “ரூபாயின் மதிப்பு முறையாக பேணப்படாமை, வட்டி வீதங்கள் இலக்குகளின்றி நிர்வகிக்கப்பட்டிருந்தமை, அதிகளவு நாணயம் அச்சிடல் போன்ற காரணிகளால் எழுந்த தாக்கங்களின் காரணமாக, பாரிய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்சார துண்டிப்புகள் போன்றவற்றுக்கு இலங்கை தற்போது முகங்கொடுக்கிறது.
கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 3.6 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தது. இதற்கு முன்னர் 2001 ஆம் ஆண்டில் நாட்டில் யுத்தம் நிலவிய சூழலில், இந்த வளர்ச்சி 1.5 சதவீதமாக பதிவாகியிருந்தது.
இரண்டு வருட காலப்பகுதியில் இரண்டு ட்ரில்லியன் ரூபாய்களுக்கு அதிகமான தொகையை இலங்கை மத்திய வங்கி அச்சிட்டிருந்தமை காரணமாக, வட்டி வீதங்கள் சீராக பேணப்படாமையால் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி மதிப்பிழந்திருந்தது. தற்போது இந்த வட்டி வீதம் 20 முதல் 25 சதவீதமாக சீராக்கம் செய்யப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியின் காரணமாக அரசியல் நெருக்கடி மற்றும் சமூக அமைதியற்ற நிலை போன்றன தோற்றுவிக்கப்பட்டுள்ளன“ என்றும் ஆளுநர் வீரசிங்க தெரிவித்தார்.
இலங்கை மத்திய வங்கியின் 72 வருட கால வரலாற்றில், 2022 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 200 இலிருந்து 380 ஆக வீழ்ச்சியடைந்திருந்தமை மிகவும் மோசமான நெருக்கடி நிலையாக அமைந்துள்ளதாகவும் இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
IUSF மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை தாக்குதல்!! (வீடியோ)