கேரளாவின் மலையோர மாவட்டங்களில் 28-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு..!!
கேரளாவில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்து வருகிறது.
மாநிலம் முழுவதும் கடந்த 2 வாரங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறியும் தென்பட தொடங்கி உள்ளன. இதனால் ஓரிரு நாட்களில் பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது.
இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேரளாவில் இன்று முதல் 28-ந் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கேரள கடலோர பகுதிகளில் 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளிலும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை தொடர்ந்து பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
இதுபோல ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதுபோல மலையோர மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. அங்கு நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதால் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.