மதச்சார்பின்மை குறித்து பேசும் தகுதியை காங்கிரசார் இழந்துவிட்டனர்: குமாரசாமி..!!
மதச்சார்பின்மை குறித்து பேசும் தகுதியை காங்கிரசார் இழந்துவிட்டனர் என்று குமாரசாமி கூறியுள்ளார். முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சித்தராமையா சாதிகளுக்கு எதிராக பேசுகிறார். ஆனால் சாதி வாரியாக நடைபெறும் மாநாடுகளில் கலந்து கொள்கிறார். இது தான் அவரது மதசார்பற்ற கொள்கை. நான் பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி நடத்தியபோது கூட மத பிரச்சினைகளுக்கு இடம் அளிக்கவில்லை. ஆனால் தற்போது என்ன ஆகியுள்ளது. கடந்த சில மாதங்களாக சமூகங்களை உடைக்க முயற்சிகள் நடக்கின்றன. இதற்கு காரணம் யார், பா.ஜனதா அரசு அமைய காரணம் யார் என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பா.ஜனதாவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி நடத்தினேன். அதே போல் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்தேன். ஆனால் எங்கள் கட்சியை பா.ஜனதாவின் “பீ டீம்” என்று காங்கிரசார் விமர்சிக்கிறார்கள்.
மராட்டியத்தில் சிவசேனா கட்சியுடன் சேர்ந்து காங்கிரஸ் ஆட்சி நடத்துகிறது. இதை என்னவென்று சொல்வது?. மதச்சார்பின்மை குறித்து பேசும் தகுதியை காங்கிரசார் இழந்துவிட்டனர். நாங்கள் எந்த கட்சியுடனும் கூட்டு சேரவில்லை. மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க சபதம் செய்து பணியாற்றி வருகிறோம். கர்நாடகத்தில் நல்லிணக்கத்தை பாழ்படுத்த இந்து அமைப்புகளை பா.ஜனதா அரசு ஊக்குவிக்கிறது. மாநிலங்களவை தேர்தலில் 4-வது இடத்திற்கு தேவையான வாக்குகள் எந்த கட்சியிடமும் இல்லை. அதனால் நாங்கள் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.