கேரளாவில் நடந்த ஊர்வலத்தில் அவதூறு கோஷம்- சிறுவனை தோளில் சுமந்து சென்ற வாலிபர் கைது..!!
கேரளாவின் ஆலப்புழா நகரில் கடந்த 21-ந் தேதி பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா சார்பில் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் பங்கேற்ற வாலிபர் ஒருவர் சிறுவன் ஒருவனை தோளில் சுமந்தபடி சென்றார். அந்த சிறுவன் கோஷம் எழுப்பியபடி சென்றான்.
அதனை பேரணியில் பங்கேற்றவர்கள் வழிமொழிந்தபடி சென்றனர். இதில் சிறுவன் எழுப்பிய கோஷம் இருபிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. மேலும் இதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆலப்புழா போலீசிலும் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் பேரணிக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 153 ( மத அடிப்படையில் குழுக்களிடையே மோதலை ஏற்படுத்துவது),505(1) (பொது அமைதிக்கு எதிரான செயல்களில் ஈடுபடுதல்) உள்பட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும்போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவனை தோளில் சுமந்த சென்றவர் ஆலப்புழாவை அடுத்த ஈராட்டுபேட்டையை சேர்ந்த அனஸ் என தெரியவந்தது.
அவரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் பேரணியை நடத்திய அமைப்பின் ஆலப்புழா பகுதி தலைவர் நவாஸ் என்பவரையும் போலீசார் பிடித்தனர். அவரிடமும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.