சட்டமா அதிபரிடம் சீ.ஐ.டி ஆலோசனை !!
ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக, கிரிஷ் நிறுவனத்துக்குச் சொந்தமான 70 மில்லியன் ரூபாய் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், விசாரணைகளை முன்னெடுத்துவரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர், இந்த விவகாரத்தில் எதிர்காலத்தில் சாத்தியமான சட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளனர்.
கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்றையதினம் (25) வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக சீ.ஐ.டியினரால் அறிவிக்கப்பட்டதுடன், வழக்கை செப்டெம்பர் 21ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.
இந்த வழக்கு அமர்வுக்கு முன்னாள் அமைச்சரும் எம்.பியுமான நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் இன்று (25) முன்னிலையாகியிருந்தார்.
இலங்கையில் ரக்பி விளையாட்டின் அபிவிருத்திக்காக இந்திய நிறுவனமான கிரிஷ் லங்கா பிரைவேட் லிமிடெட் வழங்கிய 70 மில்லியன் ரூபாயை முறைகேடாக பயன்படுத்தியதாக ஜே.வி.பியின் முன்னாள் எம்.பியான வசந்த சமரசிங்க வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
கிரிஷ் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட பணத்தை நிறுவனத்தின் உண்மையான நோக்கத்துக்கு பயன்படுத்தாமல் சந்தேகநபர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிலோன் பிரிமியம் ஸ்போர்ட்ஸ் தலைவர் நிஹால் ஹேமசிறி பெரேராவிடம் இலங்கையின் ரக்பி அபிவிருத்திக்காக கிரிஷ் நிறுவனத்தால் 70 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
நிஹால் ஹேமசிறி பெரேராவுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குக்கு கிரிஷ் நிறுவனம் பணத்தை அனுப்பியதாகவும், பின்னர் அவர், நாமல் ராஜபக்ஷவிடம் இரண்டு தடவைகளில் அந்தப் பணத்தை கொடுத்துள்ளதாகவும் நிதிக்குற்ற புலனாய்வுப் பிரிவினர் நடத்திய ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.
மிக மோசமான உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் : எச்சரிக்கிறார் விவசாயத்துறை அமைச்சர்!! (படங்கள்)
IUSF மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை தாக்குதல்!! (வீடியோ)