;
Athirady Tamil News

தமிழர்களின் அபிலாஷைகளையும் சிங்கள இளைஞர் கவனத்தில் கொள்ள வேண்டும்!!

0

இந்நாட்டில் வாழும் மலையக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளையும் போராடும் சிங்கள இளைஞர் கவனத்தில் கொள்ள வேண்டும். அதன்மூலமே உண்மையான புதிய இலங்கையை கட்டி எழுப்ப முடியும்.

குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் உழைக்கும் மக்கள் சிறு தோட்ட நில உடைமையாளர்களாக மாற வேண்டும். வீடு கட்டி வாழ காணியும், உழைத்து வாழ விளை நிலமும் பெற்று அவர்களை வாழ வைக்க விரும்பும் எமது நோக்கங்களை முன்னிலை சோஷலிச கட்சி ஆதரிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்தித்த முன்னிலை சோஷலிச கட்சி தூதுக்குழுவினரிடம், கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் திகாம்பரம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனின் இல்லத்தில், கூட்டணியினரை முன்னிலை சோஷலிச கட்சி தூதுக்குழுவின் சார்பில் அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் புபுது ஜாகொட, சஞ்சீவ பண்டார ஆகியோர் சந்தித்தனர்.

முன்னிலை சோஷலிச கட்சி தூதுக்குழுவினருக்கு, மலையக அபிலாஷை ஆவணங்களை கையளித்த கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

இந்நாட்டு மலையக தமிழரின் ஜனத்தொகை சுமார் பதினைந்து இலட்சம். இதில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் இன்னமும் தோட்ட சிறைகளுக்குள் ஒடுக்கப்பட்ட மக்களாக தோட்ட குடியிருப்புகளில் வாழ்கிறார்கள். இந்த தோட்ட குடியிருப்பு பிரதேசங்களை அரச பொது நிருவாக கட்டமைப்பின் கீழ் கொண்டு வந்து, தேசிய நீரோட்டத்தில் உள்வாங்க வேண்டும்.

இதன் மூலம், நாட்டின் ஏனைய கிராமிய பிரதேசங்களில் நடைபெறுவதற்கு சமானமாக, தோட்ட பிரதேசங்களிலும் கிராம சேவகர் வலயங்கள், பிரதேச செயலக வலயங்கள் நிர்ணயம் செய்யப்பட்ட வேண்டும். தோட்ட நிறுவனங்களுடன் பிணைக்கப்பட்டுள்ள தொழிலாளர் என்ற நிலையிலிருந்து விடுபட்டு, கிராமிய, பிரதேச, மாவட்ட மட்டங்களில் பரவலாக்கப்பட்ட அரச நிறுவனங்களின், நிருவாக மற்றும் நலவுரிமை சேவைகளை பெருகின்ற முழுமையான குடிமக்களாக தோட்டங்களில் உழைக்கும் மக்கள் உள்வாங்கப்பட வேண்டும்.

அதேவேளை இந்த தோட்ட சிறைகளுக்குள் வாழும் மலையக மக்களை உள்ளடக்கிய மலையக தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அரசியல் அபிலாஷகளை புரிந்து ஏற்றுக்கொள்ளுங்கள்.

இன்று நாட்டில் காலிமுக திடல் முதல், முழு நாட்டுக்குள்ளும் ஆங்காங்கே சிங்கள மக்கள் போராடுகிறார்கள். இந்த போராட்டக்காரர்கள் மத்தியில், முன்னிலை சோஷலிச கட்சிக்கு ஒரளவு செல்வாக்கு உண்டு என எமக்கு தெரியும். ஆகவே எமது இந்த கருத்துகளை அங்கே கொண்டு செல்லுங்கள்.

காலிமுக திடலில் போராடும் வேறு பல அணியினரும், எம்முடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் இன்று சொல்லலும் “கோடா-கோ-ஹோம்” என்ற கோஷத்தை நாம் பத்தாண்டுகளுக்கு முன்னமே எழுப்பியவர்கள். நாம் ஒடுக்கப்பட்ட இனத்தை பிரதிநிதித்துவம் செய்கிறோம். போராடும் சிங்கள குழுக்களிடம் இக்கருத்துகளை நாம் கூறியுள்ளோம். இந்நாட்டில் வாழும் மலையக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளையும் போராடும் சிங்கள இளைஞர் கவனத்தில் கொள்ள வேண்டும். அதன்மூலமே உண்மையான புதிய இலங்கையை கட்டி எழுப்ப முடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.