;
Athirady Tamil News

அன்னிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கர்நாடகம் முதலிடம்: பசவராஜ் பொம்மை..!!

0

கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை, சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில் நடைபெற்று வரும் பொருளாதார மாநாட்டில் பங்கேற்க கடந்த 22-ந்தேதி சென்றார். அவர் கர்நாடகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு தொழில் நிறுவன அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் பல நிறுவனங்களின் நிறுவனங்களை கர்நாடகத்தில் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த நிலையில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தாவோஸ் நகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

இந்தியாவில் தொழில் தொடங்க கர்நாடகம் பாதுகாப்பான மாநிலம். நாங்கள் பிற மாநிலங்களுடன் போட்டியிடவில்லை. முதலீடுகளை ஈர்ப்பதில் சர்வதேச அளவில் போட்டி போடுகிறோம். இந்தியாவில் உள்ள மொத்த வெளிநாட்டு நிறுவனங்களில் 50 சதவீதம் கர்நாடகத்தில் உள்ளது.

இந்த நிறுவனங்கள் தங்களின் நிறுவனத்தை விரிவுப்படுத்த முடிவு செய்துள்ளன. இதற்கு கர்நாடகத்தில் இருக்கும் உள்கட்டமைப்பு, திறமையான மனித வளம் மற்றும் தொழில் தொடங்க எளிமையான நடைமுறைகள் இருப்பது தான் காரணம் ஆகும். நடப்பு ஆண்டில் மேலும் 4 விமான நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. பெங்களூரு மீதான அழுத்தத்தை குறைக்கும் பொருட்டு அருகில் உள்ள நகரங்கள் மற்றும் 2, 3-வது நிலை நகரங்களில் தொழில் தொடங்க அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது.

பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கர்நாடகத்தின் வரலாறு வேறுபட்டது. இந்த தாவோஸ் பயணம் என்க்கு நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது. இங்கு வந்த சர்வதேச முதலீட்டாளர்கள், பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடு என்பதை அங்கீகரித்துள்ளனர். குறிப்பாக கொரோனாவுக்கு பிந்தைய சூழ்நிலை, சீனாவின் வீழ்ச்சி போன்றவற்றால் உலக நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டுகின்றன. அந்த நிறுவனங்கள் கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் தொழில் தொடங்க முன்னுரிமை அளிக்கின்றன.

ஏனென்றால் இங்கு உயர்ந்த தொழில்நுட்ப சுற்றுச்சூழல், அதிக எண்ணிக்கையில் ஆராய்ச்சி-வளர்ச்சி நிறுவனங்கள், விமானவியல், பாதுகாப்பு, உபகரணங்கள் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள் இருக்கின்றன. மேலும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுடன் கர்நாடகத்திற்கு நீண்ட காலமாக நல்லுறவு இருந்து வருகிறது.

கடந்த ஓராண்டாக அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு வந்த அன்னிய நேரடி முதலீடுகளில் 42 சதவீதம் கர்நாடகத்திற்கு வந்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சார வாகனங்கள் உற்பத்தி, பேட்டரி சேமிப்புக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. காலநிலை மாற்றத்தை தடுக்க வேண்டும் என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்.தீ மூலம் வெளியேறும் வாயுவால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அதை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால் தான் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம்.

கர்நாடகத்தில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 63 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகும். கர்நாடகத்தில் உள்ள எந்த நிறுவனமும் வேறு மாநிலத்திற்கு செல்லாது. ஏனென்றால் இங்குள்ள சுற்றுச்சூழல் மற்றும் தொழில் செய்வதற்கான உகந்த சூழல் இருக்கிறது. கர்நாடகத்தில் அடுத்தப்படியாக செமிகண்டக்டர், ஹைட்ரஜன் எரிபொருள், அம்மோனியா வாயு உற்பத்திக்கு நாங்கள் அதிக முன்னுரிமை செலுத்துகிறோம்.

ஹைட்ரஜன் எரிபொருள் தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் கர்நாடக அரசுடன் பேசி வருகின்றன. அதற்கு சில குறிப்பிட்ட இடங்கள் மற்றும் வசதிகள் தேவைப்படுகின்றன. அதை செய்து கொடுப்பதாக அரசு உறுதி அளித்துள்ளது. கர்நாடக அரசு ஏற்கனவே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்கையை அமல்படுத்தியது. ஹைட்ரஜன் எரிபொருளை அதிகளவில் உற்பத்தி செய்து அதை ஏற்றுமதி செய்வது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தப்படுகின்றன. பெங்களூருவை தவிர்த்து மாநிலத்தின் பிற பகுதிகளில் இந்த நிறுவனங்களை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டோம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.