விஜயேந்திராவுக்கு டிக்கெட் கிடைக்காததால் அதிருப்தியா?: எடியூரப்பா பேட்டி..!!
விஜயேந்திராவிற்கு தேர்தலில் டிக்கெட் வழங்காததால் எடியூரப்பா அதிருப்தியில் உள்ளாரா என்பது குறித்து பரபரப்பு பேட்டியளித்துள்ளார். கர்நாடக மேல்-சபை தேர்தலில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு பா.ஜனதா சார்பில் போட்டியிட டிக்கெட் கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் எடியூரப்பா அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
எங்கள் கட்சி யாருக்கு டிக்கெட் கொடுத்துள்ளதோ அதை ஏற்கிறோம். எனது மகன் விஜயேந்திராவுக்கு டிக்கெட் கிடைக்காததால் எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. அவரது பணியை பார்த்து கட்சி அவருக்கு முதலில் இளைஞர் அணி பொதுச் செயலாளர் பதவியும், பிறகு கட்சியின் மாநில துணைத்தலைவர் பதவியும் வழங்கியுள்ளன.
வரும் நாட்களிலும் அவருக்கு நல்ல பதவி கிடைக்கும். அவர் கட்சிக்காக விசுவாசமாக பணியாற்றி வருகிறார். இந்த விவகாரத்தில் எனக்கு அதிருப்தி இல்லை. யாரும் அதிருப்தி தெரிவிக்க கூடாது. குழப்பத்தை ஏற்படுத்த கூடாது. கட்சி மேலிடம் எடுத்த முடிவை அனைவரும் மதிக்க வேண்டும். கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடக்கிறது. இதில் கட்சியை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்த அனைவரும் சேர்ந்து பாடுபட வேண்டும்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.