கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை தேவை: பிரதமரிடம் ஈபிஎஸ் கோரிக்கை..!!
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
பிரதமர் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் உரையாற்றினர்.
பின்னர், சுமார் 8 மணியளவில் டெல்லிக்கு பிரதமர் மோடி புறப்பட்டார்.
இந்நிலையில், சென்னை வந்துள்ள பிரதமர் மோடியுடன் அதிமுகவின் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினர். பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், வேலுமணி, தங்கமணி ஆகியோரும் உடன் இருந்தனர்.
அப்போது, நெசவாளர்கள் நலனை கருத்தில் கொண்டு நுல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதான் திட்டத்தின் கீழ் சென்னை- சேலம் இடையே மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் கோரிக்கை விடுத்தார்.
மேலும், கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை தேவை என்றும் நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை தொடங்க மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார்.