ஊடகவியலாளர்கள் மீது குண்டர்கள் தாக்குதல் !!
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மீது
குண்டர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாக கண்டித்துள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“மே 23 ஆம் திகதி அன்று குருநாகல், அனுராதபுரம் வீதி, மினுவாங்கெட சிபெட்கோ
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் செய்தி அறிக்கையிட்டுக் கொண்டிருந்த
வடமேல் மாகாண ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் செயலாளர், குருநாகல் மாவட்ட
பிரதேச நிருபர் அசோக சந்திரசேகர மற்றும் மே மாதம் 21 ஆம் திகதி திருகோணமலை
மூதூர் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் செய்தி
சேகரித்துக்கொண்டிருந்த திருகோணமலை மாவட்ட பிரதேச நிருபரான எம்.என்.எம் புஹாரி
என்ற இரு ஊடகவியலாளர்களும் குண்டர்கள் சிலரால் தாக்கப்பட்டதுடன் அவர்களது
கையடக்கத் தொலைபேசியும் பலவந்தமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்தி அறிக்கையிடலை ஒரு தனிநபரோ அல்லது ஒரு குழுவோ சீர்குலைக்கும்
அல்லது தடுக்கும் வகையில் செயற்படுவதானது, அந்த எரிபொருள் நிரப்பு
நிலையத்திற்குள் பொதுமக்களுக்கு விரோதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால்
கூட இருக்கலாம் ஆகவே முடியும்வரை குறித்த அதிகாரிகள் இது தொடர்பில் கவனம்
செலுத்த வேண்டும் என்பதனை இங்கு வலியுறுத்திக்கொள்கின்றோம்.
சுதந்திர ஊடக இயக்கம் இத்தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதோடு,
ஊடகவியலாளர்களை அச்சுறுத்தித் தாக்கி அவர்களின் கையடக்கத் தொலைபேசிகளை
பறிமுதல் செய்த குண்டர்களை உரியமுறையில் விசாரணை நடத்தி அவர்களை கைது
செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு பொலிஸ்மா அதிபரைக் கேட்டுக்கொள்கிறது.
அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அடையாள
அட்டையைக் காண்பித்து தம்மை ஊடகவியலாளர்கள் என நிரூபித்த பின்னரும்
தொடர்ந்தும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் இடம்பெறுமானால்,
அது ஊடக சுதந்திரம் மற்றும் ஊடக தொழில்சார் நிபுணத்துவம் ரீதியாக நாட்டில்
நிலவும் அவல நிலையையே பிரதிபலிக்கின்றது என்பதனைச் சுதந்திர ஊடக இயக்கம்
இங்கு சுட்டிக்காட்டுகின்றது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.