சினைப்பசு இறைச்சியாக்கப்பட்டமை; வட்டு. பொலிஸாருக்கு அறிவித்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு!!
யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் நான்கு மாத சினைப்பசுவைத் திருடி இறைச்சியாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இச்செயலில் ஈடுபட்டவர்கள் தொடர்பான விபரங்களை வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தெரியப்படுத்திய போதிலும் அவர்கள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாட்டின் உரிமையாளரால், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இது குறித்து அகில இலங்கை சைவ மகா சபைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொன்னாலையைச் சேர்ந்த பா.பராபரன் என்பவரின் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான நான்கு மாத சினைப்பசு பொன்னாலையில் உள்ள அவரது வயற்காணியில் ஏனைய மாடுகளுடன் கட்டப்பட்டிருந்த நிலையில், கடந்த (21) சனிக்கிழமை இரவு குறித்த மாடு காணாமற்போயிருந்தது.
இது தொடர்பாக மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து உரிமையாளர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இறைச்சிக் கடைகளுக்கும் சென்று, இறைச்சியாக்கும் மாடுகள் உள்ள இடங்களில் தேடியுள்ளனர். எனினும் மாடு கிடைக்கவில்லை.
இதையடுத்து, பொன்னாலை பெரியகுளத்திற்கு சமீபமாக, நாகதம்பிரான் ஆலயத்திற்கு அருகே மாட்டின் தோல், மாடு கட்டப்பட்டிருந்த கயிறு, எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அயல் ஊரைச் சேர்ந்த சிலர் மாட்டினை இறைச்சியாக்கி முச்சக்கரவண்டியில் இறைச்சியை ஏற்றிச்சென்று விற்பனை செய்யப்பட்டமையும் பின்னர் தெரியவந்தது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள், இதற்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி மற்றும் இறைச்சியை வாங்கியவர்களின் பெயர் விபரங்கள் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு வழங்கப்பட்டன.
எலும்பு, தோல் என்பவற்றை வீட்டிற்கு கொண்டு சென்று வைத்திருங்கள். தாங்கள் விசாரணை நடத்துகின்றோம் என பொலிஸார் கூறினர் எனவும் இதுவரை அவர்கள் எந்தவி நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மாட்டின் உரிiயாளர் தெரிவித்தார்.
பொலிஸார் வரவில்லை, வீட்டில் வைக்கப்பட்டுள்ள மாட்டின் எச்சங்கள் துர்நாற்றம் வீசுகின்றன. எமக்கு நீதியை வழங்க நடவடிக்கை எடுங்கள் எனத் தெரிவித்து மாட்டின் உரிமையாளர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் இன்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்துள்ளனர்.
இதேவேளை, பசுவதை மற்றும் குறி சுடுதலுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல்கொடுத்துவரும் அகில இலங்கை சைவ மகா சபையின் கவனத்திற்கும் இந்த விடயத்தை கொண்டுசென்றுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”