பயங்கரவாதத்தை நியாயப்படுத்த வேண்டாம்- இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிற்கு, இந்தியா வலியுறுத்தல்..!!
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 2019-ல் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் யாசின் மாலிக் குற்றவாளி என தீர்ப்பளித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
இந்நிலையில் யாசின் மாலிக்கிற்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தனிப்பட்ட மனித உரிமைகள் ஆணையம் விமர்சனம் செய்திருந்தது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, மாலிக்கின் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாக என்றார்.
யாசின் மாலிக் வழக்கின் தீர்ப்பு தொடர்பாக இந்தியாவை விமர்சித்துள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் மனித உரிமைகள் ஆணைய கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று இந்தியா கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம் அந்த அமைப்பு யாசின் மாலிக்கின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.
பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத சூழலையே உலகம் விரும்புகிறது என்றும், பயங்கவாதத்தை எந்த வகையிலும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நியாயப்படுத்த வேண்டாம் என்றும் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.