21 இன் அதிகாரங்களை அனுபவிக்க ரணிலுக்கு தகுதி இல்லை!
தற்போது கொண்டுவரப்படவுள்ள 21 ஆம் திருத்தத்தில் வழங்கப்படும் அதிகாரங்களை அனுபவிக்கும் உரிமை தற்போதைய பிரதமருக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ இல்லை. எனவே ஓராண்டு காலத்திற்குள் புதிய மக்கள் ஆணையை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும், புதிய அரசாங்கமும் பிரதமருமே 21 ஆம் திருத்தத்தின் அதிகாரங்களை அனுபவிக்க முடியும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியிடம் இருந்து அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் என கூறும்போது அது பல்வேறு தரப்பை சென்றடைகின்றது. அதில் முக்கியமாக பிரதமருக்கும் அதிகாரங்கள் பகிரப்படுகின்றன. பாராளுமன்றத்திற்கும் பகிரப்படுகின்றது.
ஆனால் இப்போதுள்ள பிரதமர் மக்களினால் நிராகரிக்கப்பட்ட ஒருவர், அவருக்கு இந்த அரசியல் அமைப்பு திருத்தம் மூலமாக புதிய அதிகாரங்கள் கிடைக்கின்றன. ஆனால் அதனை அனுபவிக்கும் ஆணை அவருக்கு இல்லை. எனவே அவர் இந்த ஆசனத்தில் இருக்க தகுதியிலாதவர். எனவே இப்போதுள்ள பாராளுமன்றத்தின் கால எல்லையை குறைக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.
எனவே மேலும் ஒரு வருடத்திற்குள் இந்த பாராளுமன்றத்தின் கால எல்லையை கட்டுப்படுத்தி அதன் பின்னர் புதிய பாராளுமன்றம் மற்றும் பிரதமர் தெரிவு செய்யப்பட்ட வேண்டும். அவர்களுக்கே 21 ஆம் திருத்தத்தின் அதிகாரங்கள் கிடைக்க வேண்டும். இப்போதுள்ள பிரதமருக்கு 21 ஆம் திருத்தத்தின் அதிகாரங்கள் கிடைக்க முடியாது. எனவே புதிய மக்கள் ஆணைக்காக பாராளுமன்றத்தின் கால எல்லையை மட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
அத்துடன் 21 ஆம் திருத்தத்தை நிறைவேற்றுவதில் மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் சில யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக கட்சி தாவினால் பாராளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட வேண்டும், ஜனாதிபதிக்கு பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட வேண்டும், ஜனாதிபதிக்கு எந்தவொரு அமைச்சுப்பதவிகளையும் வகிக்க முடியாது , இரட்டை பிரஜாவுரிமை கொண்ட நபர்கள் அரசாங்கத்தில் எந்தவொரு முக்கிய பதவியிலும் அங்கம் வகிக்க கூடாது, அரசியல் அமைப்பு சபையினூடாகவே அமைச்சின் செயலாளர்கள் நியமிக்கப்பட வேண்டும், மக்கள் பிரதிநிதிகளின் சொத்து விபரங்கள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டுகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு விசாரணைகளை நடத்த முடியும் என்ற விடயங்களை உள்ளடக்கிய யோசனைகளை முன்வைத்துள்ளதாவும் அவர் கூறினார்.