நாட்டில் பாரிய மருந்து தட்டுப்பாடு !!
நாட்டில் தற்போது நூறுக்கும் அதிகமான அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும், அடுத்த ஆறுமாத காலத்தில் இது நாட்டில் பாரிய தாக்கத்தை வெளிப்படுத்தப் போவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட மருத்துவ சங்கங்கள், இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலையில் ஏதேனும் சர்வதேச அமைப்புகளோ அல்லது நாடுகளோ தமக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
தற்போதுள்ள நிலைமையில் நாட்டில் பாரிய அளவிலான மருந்து தட்டுப்பாடு நிலவுவதாகவும் , இதற்கு நாட்டின் அந்நிய செலாவணி இல்லாதமையே காரணமாக அமைந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர்கள் இந்த நிலைமையில் எந்தவொரு நாடோ அல்லது அமைப்புகளோ இலங்கைக்கு மருந்து உதவிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளனர்.
அடுத்த ஆறுமாத காலத்திற்குமான உடனடி மருந்துகள் தேவைப்படுவதாகவும், இருதய நோய்க்கான மருந்துகள், சிறுவர்களுக்கான மற்றும் கர்ப்பிணி தாய்மாருக்கான மருந்துகளுக்கும் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், விசர்நாய் கடி, புற்றுநோய்க்கான மருந்துகள் உள்ளிட்ட மருந்துகள் கடந்த காலங்களில் இருந்தே கிடைக்கப்பெறவில்லை எனவும் கூறியுள்ள அவர்கள்,
தேசிய மருந்து உற்பத்தி நிறுவனங்கள் ஏதேனும் உதவிகளை மேலதிகமாக செய்ய முடியும் என்றால் அதற்கு அரசாங்கம் இடமளிக்க வேண்டும் எனவும், கடந்த காலங்களில் செய்ததை போன்று தேசிய மருந்து உற்பத்தி நிறுவனங்களை கட்டுப்படுத்தாது சுயாதீனமாக செயற்பட இடமளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், தேசிய மருந்தாக்கள் கூட்டுத்தாபனம் மருந்துகளை விரைவாக கொள்முதல் செய்து வருவதாகவும், தற்போது 100க்கும் அதிகமான அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவித்துள்ளனர்.