மாநில கட்சிகளில் முதல் இடத்தை பிடித்தது- தி.மு.க.வுக்கு ரூ.150 கோடி வருமானம்..!!
இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மாநில அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு ஆண்டும் வரவு-செலவு கணக்கை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்வது வழக்கம்.
இதன்படி 2020-2021 ஆண்டிற்கான வரவு-செலவு கணக்கினை கட்சிகள் சமர்பித்தன.
இதில் 31 பெரிய கட்சிகளின் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்த ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க 2020-2021-ம் ஆண்டில் மொத்தம் 149.95 கோடி நன்கொடை பெற்று மாநில கட்சிகளில் முதலிடத்தை பெற்று உள்ளது. இது நாடு முழுவதிலும் உள்ள மாநில கட்சிகளின் மொத்த வருவாயில் 28 சதவீதம் ஆகும்.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2019-2020-ல் அக்கட்சியின் வருமானம் 64.90 கோடியாக இருந்தது. இது தற்போது 149.95 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
இது கடந்த ஆண்டை விட 131 சதவீதம் கூடுதலாகும். ஆனால் இந்த ஆண்டு வருமானத்தை விட தி.மு.க. அதிக அளவு செலவு செய்துள்ளது.
தி.மு.க. மொத்தம் ரூ.218.49 கோடி செலவு செய்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சி ரூ.54.70 கோடியும், அ.தி.மு.க. ரூ.42.36 கோடியும் செலவிட்டு உள்ளது.
தி.மு.க.வுக்கு அடுத்த படியாக ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 108 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி 2-வது இடத்தையும் ஒடிசாவில் உள்ள பிஜு ஜனதாதளம் ரூ.73 கோடி வருமானம் பெற்று 3-வது இடத்தையும் பெற்று உள்ளது.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 20 சதவீதமும் பிஜூ ஜனதாதளம் கட்சிக்கு 13 சதவீதமும் வருமானம் அதிகரித்து உள்ளது.
அ.தி.மு.கவுக்கு வருமானம் குறைந்துள்ளது. 2019-2020-ல் 89 கோடியாக இருந்த வருமானம் தற்போது ரூ.34 கோடியாக குறைந்துள்ளது.
ஆனால் பா.ம.க. வருமானம் 55.60 லட்சம் ரூபாயில் இருந்து 1.16 கோடியாகவும், ம.தி.மு.க. வருமானம் 1.5 கோடியில் இருந்து 2.86 கோடியாகவும் அதிகரித்து உள்ளது.
இந்த வருமானம் அனைத்தும் நன்கொடைகள் மற்றும் தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.