கச்சதீவை விட்டுக் கொடுக்க முடியாது: பாதுகாப்பு விடயத்தில் இந்தியா அச்சம் கொள்ளத் தேவையில்லை! செல்வம் அடைக்கலநாதன் எம்.பி!!
கச்சதீவை விட்டுக் கொடுக்க முடியாது. இந்தியாவின் பாதுகாப்பு விடயத்தில் இந்தியா அச்சம் கொள்ளத் தேவையில்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று (29.05) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாரதப் பிரதமர் தமிழ் நாட்டிற்கு வந்திருந்த போது கச்சதீவு பிரச்சனை அதில் எழுப்பப்பட்டுள்ளது. கச்ச தீவை மீட்பதற்கு இது சரியான தருணம். ஆகவே அதனை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ முதலமைச்சர் ஊடாக பாரத பிரதமரிடம் முன் வைத்தது மன வருத்தம் தருகின்றது.
இந்திய அரசாங்கம் இலங்கையில் பொருளாதாரப் பிரச்சனை ஏற்பட்ட போது முதன் முதல் உதவி செய்த அரசாங்கமாக உள்ளது. பல உதவிகளை அவர்கள் செய்து வந்தார்கள். அதே நேரத்தில் தமிழ் நாட்டு முதலமைச்சர் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் மக்களுக்கு உதவி செய்ய காத்திருக்கின்றோம் என்ற கருத்தை முன் வைத்த போது எங்களுடைய தரப்பில் இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் தமிழ் நாடு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன்வைத்தோம். இந்த பொருளாதாரப் பிரச்சனை சிங்கள மக்களையும் பாதித்திருக்கிறது. இது தான் தமிழர் பண்பாடு என்ற விடயத்தை முதலமைச்சருக்கு எடுத்துக் கூறினோம். இலங்கை பூராகவும் அவர்களுடைய உதவி வந்து கொண்டிருகிறது.
அத்துடன் இந்தியாவில் ஒரு சிறுமி சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை எங்களுடைய மக்களுக்கு கொடுக்கின்ற நெகிழ்ச்சியான விடயத்தைப் பார்க்க முடிந்தது. அன்றாடம் பிச்சை எடுத்து வாழும் ஒரு பெரியவர் தனது பணத்தை இலங்கை மக்களுக்கு கொடுக்கின்ற நிகழ்வையும், ஒரு தேநீர் கடைக்காரர் பலரையும் கூப்பிட்டு தேநீர் அருந்த வைத்து அவர்களிடம் விரும்பிய பணத்தை தரும்படி கேட்டு அதனையும் வழங்கியிருந்தார். இவ்வாறு தமிழ் நாட்டு மக்கள் இலங்கைப் பொருளாதாரப் பிரச்சனைக்கு பாரிய நல்லெண்ணத்துடன் உதவி செய்துள்ளார்கள். அந்த உதவி எங்களால் மறக்க முடியாது. தமிழ் நாட்டு மக்கள் மற்றும் தமிழ் நாட்டு அரசாங்கத்தை நாம் மறக்க முடியாது. தமிழ் நாட்டு அரசாங்கம் அன்று முதலே தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயற்படுகிறது.
உண்மையில் கஸ்ரப்படுகின்ற நிலையில் இருக்கும் போது கச்சதீவைப் பெறுவதென என தமிழக முதல்வர் எண்ணியது கவலை தருகிறது. இதனால் மனவருத்தம் அடைகின்றோம். தமிழர்களுக்கு தற்போதைய தமிழக முதல்வரின் தந்தையார் பாரிய சேவைகளை செய்துள்ளார். இந்த நிலையில் கஸ்ரமான நிலையப் பயன்படுத்தி கச்சதீவை இந்தியா பெற முயல்வது ஏற்றுக் கொள்ள முடியாது. கச்சதீவைப் பொறுத்தவரை அதில் எங்களது மீனவர்கள் பயன்பெறும் வாய்ப்பு கூட இருக்கிறது. கச்சதீவை விட்டுக் கொடுக்க முடியாது. அது தமிழர்களின் தீவாக உள்ளது.
வடக்கில் வாழும் தமிழர்கள் பயன்படுத்தும் தீவாக இருக்கின்ற போதும், இந்தியாவிற்கு பங்கம் ஏற்படும் வகையில் அதனை பயன்படுத்த தமிழ் மக்கள் ஒரு போதும் அனுமதியளிக்க மாட்டார்கள். அதனால் இந்திய தனது பாதுகாப்பு விடயத்தில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. பாரத பிரதமர் கூட இலங்கை தமிழர்களை காப்பாற்ற முயற்சிப்போம் என கூறிய நிலையில் தமிழக முதல்வர் கூறியதை ஏற்க முடியவில்லை. இலங்கை தமிழ் மீனவர்கள் எப்போதும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.