திருப்பதியில் 24 மணி நேரமாகியும் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் குடும்பத்துடன் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் அவர்களை தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் வைகுந்தம் காம்ப்ளக்ஸ் 31 அறைகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் விடிய விடிய தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர்.
திருப்பதியில் நேற்று வரிசையில் காத்திருந்த பக்தர்கள் 24 மணி நேரமாகியும் இன்னும் வளாகத்திற்குள் செல்ல முடியாமல் வரிசையிலேயே காத்திருக்கின்றனர்.
கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்து வருவதால் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. கூட்டத்தை போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் போலீசார் ஒழுங்கு படுத்தி கண்காணித்து வருகின்றனர். சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 4,500 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
பக்தர்கள் 48 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பதியில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர் காற்று வீசியது. இந்த நிலையில் நேற்று முதல் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உணவு, குடிநீர், பால் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில்:-
திருப்பதியில் தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவதால் வார இறுதி நாட்களில் தரிசனத்திற்கு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். மற்ற நாட்களில் தரிசனத்திற்கு வருவதால் சிரமமின்றி சாமி தரிசனம் செய்து செல்லலாம் என தெரிவித்தனர்.
திருப்பதியில் நேற்று 89,318 பேர் தரிசனம் செய்தனர். 48,539 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.76 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.