2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-வங்காளதேசம் இடையே மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடக்கம்..!!
இந்தியா-வங்காளதேசம் இடையே பந்தன் எக்ஸ்பிரஸ் (கொல்கத்தா-குல்னா-கொல்கத்தா) மற்றும் மைத்ரீ எக்ஸ்பிரஸ் (கொல்கத்தா-டாக்கா-கொல்கத்தா) ஆகிய 2 ரெயில்கள் இயக்கபட்டு வந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த ரெயில் போக்குவரத்து நிறத்தி வைக்கப்பட்டு இருந்தது.
கொரோனா குறைந்ததையடுத்து இன்று முதல் மீண்டும் இந்த ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதாக கிழக்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் உள்ள ஜல்பைகுரி ரெயில் நிலையத்தில் இருந்து வங்காளதேசம் டாக்கா வரை 3-வது புதிய மிதாலி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 1-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது. இதன் மொத்த தூரம் 595 கிலோ மீட்டர் ஆகும்.
இதில் 69 கிலோ மீட்டர் இந்தியாவுக்குள் உள்ளது.
இந்த புதிய ரெயில் போக்குவரத்தை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஸ்நவ் மற்றும் வங்காளதேச மந்திரி நூருல் இஸ்லாம் ஆகியோர் 1-ந்தேதி கொடி அசைத்து தொடங்கி வைக்கின்றனர்.
இந்த ரெயில் இந்தியாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மற்றும் புதன்கிழமைகளிலும், வங்காளதேசத்தில் இருந்து திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளிலும் இயக்கப்படும்.
இந்த ரெயிலுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி விட்டது.
இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.