ஜம்மு காஷ்மீரில் வெடிகுண்டுகளுடன் பறந்த டிரோன் – சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப் படை..!!
ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகமாக உள்ளது. அவர்களை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து வேட்டையாடி வருகிறார்கள்.
இதனால் பல்வேறு சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் ஆத்திரம் அடைந்துள்ள பயங்கரவாதிகள் காஷ்மீரில் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்துவதற்கு முயற்சித்து வருகிறார்கள். இதுவரை இல்லாத புது முயற்சியாக டிரோன்கள் (ஆளில்லா குட்டி விமானங்கள்) மூலம் தாக்குதல் நடத்துவதை தொடங்கி உள்ளனர்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் டிரோன்களை ஊடுருவச் செய்து வருகிறார்கள். குறிப்பாக, ஜம்மு பகுதியிலும், ஸ்ரீநகரிலும் அதிகளவில் டிரோன்கள் ஊடுருவி இருக்கின்றன. எனவே அவை பறந்து வந்தால் சுட்டுவீழ்த்துவதற்கு எல்லைப் பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் இன்று மர்ம டிரோன் ஒன்று பறந்து வந்தது. எல்லையில் இருந்து சில கி.மீட்டர் தூரத்துக்கு ஊடுருவி பறந்து வந்த டிரோனை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.
கீழே விழுந்த டிரோனைக் கைப்பற்றி ஆய்வு செய்ததில் அதில் காந்த குண்டுகள் மற்றும் கையறி குண்டுகள் இருப்பதைக் கண்டறிந்தனர். உடனே அங்கு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டுகள் செயலிழக்க வைக்கப்பட்டன.
புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை அடுத்த மாத இறுதியில் தொடங்க உள்ள நிலையில் வெடிகுண்டுகளுடன் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.