ராஜபக்ஷர்களை திருப்திப்படுத்த சதி !!
ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தத்தை வெற்றிகொள்ள ஐக்கிய மக்கள் சக்தி செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ,
ராஜபக்ஷர்களை திருப்திப்படுத்தும் வண்ணம் அரசியலமைப்பை திருத்த அரசாங்கம் சதி செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
காலி மற்றும் கம்பஹா மாவட்டங்களைச் சார்ந்த ஐக்கிய மக்கள் சக்தியின் சமூக ஊடக செயற்பாட்டாளர்களுடன் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (29) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பதற்கான முதல் அடியை எடுக்க வேண்டிய தருணத்தில் சில சந்தர்ப்பவாதிகள் ராஜபக்ஷர்களை பாதுகாப்பதற்காக செயற்படுவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முழுமையான 21 ஆவது திருத்தப் பிரேரணைக்கு எதிரான சதிகள் மற்றும் அதை நீர்த்துப்போகச் செய்யும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.
ராஜபக்ஷர்களை வீட்டுக்கு அனுப்புவதே நாட்டு மக்களின் நோக்கமும் கோரிக்கையும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ராஜபக்ஷர்களை பாதுகாப்பதே குறிப்பிட்ட குறுகிய கும்பல் ஒன்றின் நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.
நாட்டில் இன்று கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாரபட்ச கவனிப்பு காரணமாக அறுவடை குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவை எதோச்சதிகார போக்கினாலான தீர்வுகளால் ஏற்ப்பட்ட பிரச்சினைகள் என தெரிவித்த அவர், அரசாங்கமே இந்த சகல பிரச்சினைகளுக்கும் பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.
காலி முகத்திடல் போராட்டம் ஆரம்பமாகி சனிக்கிழமையுடன் (28) 50 நாட்கள் கடந்துள்ளதோடு,போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரின் கையடக்கத் தொலைபேசியை ஜனாதிபதி செயலகத்தின் அலுவலக அதிகாரி ஒருவர் அபகரித்துச் சென்றுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இதுவே இந்த அரசாங்கம் வழங்கியுள்ள ஊடக சுதந்திரம் எனவும் குறித்த இளைஞரின் சுதந்திர ஊடக பாவனைக்கு எதிராக செயற்ப்பட்ட அனைவருக்கும் எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும், இளைஞரின் தொலைபேசியை உடனடியாக அவரிடம் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.