;
Athirady Tamil News

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை- பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்..!!

0

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 11ந் தேதி முதல் நடப்பாண்டு பிப்ரவரி 28ந் தேதி வரை கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர்கள் இருவரையோ, பெற்றோரில் ஒருவரையோ அல்லது பாதுகாவலரையோ அல்லது தத்தெடுத்த பெற்றோர்களையோ இழந்த குழந்தைகளுக்கு அரசு ஆதரவளிப்பதற்காக குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டம், கடந்த ஆண்டு மே 29ந் தேதி பிரதமரால் தொடங்கி வைக்கப் பட்டது.

கொரோனாவால் அனாதையான குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய அவர்களுக்கு உறைவிட வசதி அளித்தல், கல்வி உதவித் தொகை வழங்குதல், 23 வயது வரை ரூ. 10 லட்சம் நிதி உதவி அளித்தல் மற்றும் மருத்துவ காப்பீடு மூலம் அவர்களது ஆரோக்கியத்தை உறுதி செய்தல் முதலியவை இந்தத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், பி.எம். கேர்ஸ் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள குழந்தைகளில் பள்ளிக்கு செல்வோருக்கு கல்வி உதவித்தொகையை இன்று காலை காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியின் போது குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்ட கணக்கியல் புத்தகம் மற்றும் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் சுகாதார அட்டையும் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தினால் பயனடையும் குழந்தைகள், தங்களது பாதுகாவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவருடன் காணொலி வாயிலாக இன்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.