’கச்சைதீவை இந்தியா கோருவதை ஏற்க முடியாது -தர்மலிங்கம் சித்தார்த்தன் ’ !!
ஒப்பந்தம் செய்து 50 வருடங்களின் பின் கச்சைதீவை இந்தியா கோருவதை ஏற்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று கச்சதீவை இந்தியா முழுமை பெற வேண்டும் என்ற கோஷம் இந்தியாவில் பெருவாரியாக எழுந்துள்ளது. கச்சத்தீவை இந்தியாவிற்கு கொடுப்பதன் மூலம் வடக்கு மீனவர்களின் நிலை இன்னும் மோசமடையும்.
இப்பொழுதே இந்திய மீனவர்கள் மன்னார் கடற்தொழில் மற்றும் பருத்தித்துறை கடற்கரை வரை வருகை தந்து மீன்பிடியில் ஈடுபடுவதோடு எங்களுடைய வளங்களை இல்லாது செய்யும்நிலையை காணக்கூடியதாக இருக்கின்றது.
ஆகவே இதை அடிப்படையாகக் கொண்டு கச்சதீவை இந்தியாவிற்கு கொடுக்க முடியாது என்பதுதான் என்னுடைய கருத்து. இந்திய பிரதமர் இந்திரா காந்திக்கும் இலங்கையின் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவும் இடையில் 50 வருடங்களுக்கு மேலாக கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கச்சதீவு இலங்கையின் கீழ் இருந்து வருகின்றது. ஆகவே மீண்டும் இந்த பிரச்சினையை தொடக்கி விடுவது ஒரு சர்ச்சையாகவே காணப்படுகிறது என்று தெரிவித்தார்.