திருப்பதியில் இலவச தரிசனம் செய்ய 20 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இரவு 7 மணியளவில் கோவிலில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள லேப்பாட்சி வணிக வளாகம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இலவச தரிசனத்துக்கு 20 மணி நேரம் ஆனது. இதுபற்றி தகவல் அறிந்ததும் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி திருமலை முழுவதும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் யாரும் எதிர்பார்க்காத வகையில் திருமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது. கொரோனா தொற்று பரவலால் 2 ஆண்டுகளாக திருமலைக்கு பக்தர்கள் யாரும் வர முடியவில்லை.
கோவிலில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பொறுமையாக இருந்து தரிசனம் செய்ய வேண்டும்.
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், பொறுமையை கடைப்பிடித்து சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும், என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.