தூக்கத்திற்காக கஞ்சா பயன்படுத்தியதாக ஆர்யன் கான் வாக்குமூலம்: குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்..!!
மும்பையில் இருந்து கோவா நோக்கி கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருளுடன் விருந்து நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், மத்திய விசாரணை அமைப்பான போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். நடுக்கடலில் கப்பல் சென்றபோது நடந்த இந்த சோதனையில், அங்கு போதைப்பொருள் விருந்து நடந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து போதை விருந்தில் கலந்து கொண்டதாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்(வயது23) உள்பட 8 பேரை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் சுமார் ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்ட ஆர்யன் கான் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் ஆர்யன் கான் வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணைக்குழு சமீபத்தில் சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், ஆர்யன் கான் உட்பட 6 பேரின் பெயர்கள் இடம் பெறவில்லை. அவர்களுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்பதால் அவர்கள் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை எனக்கூறப்பட்டது. இந்தநிலையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ஆர்யன் கான் தனக்கு போதைப்பொருள் பழக்கம் இருந்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
அதாவது 2018-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பட்டப்படிப்பு படித்துக்கொண்டு இருந்தபோது, ஆர்யன் கான் சரியாக தூக்கம் இன்றி தவித்துள்ளார். அவர் தனது தூக்க பிரச்சினைக்கு தீர்வு தேடியபோது கஞ்சா பயன்படுத்தினால் தூக்க கோளாறு நீங்க வாய்ப்புள்ளதாக அவர் சில இணைய கட்டுரைகளை படித்துள்ளார்.
இதற்காக அவர் அங்கு கஞ்சா வாங்கி பயன்படுத்த ஆரம்பித்ததாக தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் அவர் முன்பு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதேபோல ஆர்யன் கான் தனது செல்போனில் நண்பர்களுடன் போதைப்பொருள் குறித்து வாட்ஸ்-அப்பில் உரையாடியதையும், குறுந்தகவல்கள் அனுப்பியதையும் விசாரணையின்போது ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும் அந்த உரையாடல்களுக்கும் தற்போது அவர் மேல் பதியப்பட்டுள்ள வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரியவந்தது.
சோதனையின்போது ஆர்யன் கானிடம் இருந்து போதைப்பொருள் மீட்கப்படவில்லை. மேலும் இந்த சம்பவத்தில் ஆர்யன் கான் பங்கை நிரூபிக்கக்கூடிய உறுதியான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. எனவே அவர் சந்தேகத்திற்கிடமின்றி குற்ற சதியில் ஈடுபட்டுள்ளார் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை போன்ற காரணங்களால் ஆர்யன் கான் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.