தொடர்ந்து அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்: திருப்பதியில் மீண்டும் நேரம் ஒதுக்கீடு முறையில் தரிசன டோக்கன்..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 3 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் திருப்பதியில் தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் கடந்த 2 நாட்களாக தரிசனம் செய்ய முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பி வைக்கும் வைகுண்டம் காம்ப்லக்ஸ் 31 அறைகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
கோவிலுக்கு வெளியே வெங்கமாம்பா கோவில் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரவு, பகலாக வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர். திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது.
இதனால் பக்தர்கள் தரிசனத்திற்கு 20 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. கடந்த வெள்ளிக்கிழமை 73, 358 பேர் தரிசனம் 41,900 பேர் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.4.16 கோடி காணிக்கையாக வசூலானது.
இந்தநிலையில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்து நேற்று முன்தினம் 89,318 பேர் தரிசனம் செய்தனர். 48,539 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 3.76 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.
திருப்பதியில் நேற்று 90, 885 பேர் தரிசனம் செய்தனர். 35,707 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.18 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
தரிசனத்திற்கு தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரும், திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளும் திணறி வருகின்றனர்.
மேலும் பக்தர்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு முன்னேறி செல்ல முயல்வதால் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு வருகிறது.
தரிசனத்திற்கு வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு, குடிநீர், பால், காபி, மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த திருப்பதியில் இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு முறையில் தரிசன டோக்கன்கள் வழங்க தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
நேற்று மாலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் கூட்டத்தை ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில்;-
வரலாறு காணாத வகையில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருவதால், சில நாட்கள் கழித்து பொறுமையாக தரிசனத்திற்கு வர வேண்டும் என்றார்.