;
Athirady Tamil News

18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்தும் வாய்ப்பு வழங்கப்படாதது ஏன்?- நக்மா வேதனை..!!

0

தமிழ் திரை உலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நடிகையாக இருந்தவர் நக்மா. நடிகை ஜோதிகாவின் அக்காவான இவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர்.

தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து புகழ்பெற்று திகழ்ந்தார். தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், கார்த்திக் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து நடித்தவர் என்ற பெருமையும் நக்மாவுக்கு உண்டு. இவர் நடித்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சினிமாவில் பிரபலமாக இருக்கும் போதே அவர் திடீரென அரசியலில் குதித்தார். கடந்த 2004-ம் ஆண்டு இவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இடையில் சிறிது காலம் அவர் ஆன்மீக பாதைக்கு திரும்பினார்.

தியானம் மற்றும் கிறிஸ்தவ ஜெப கூட்டங்களில் கலந்து கொண்டாலும் அதன்பிறகு அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டார். பல நடிகர்களுடன் காதல் “கிசு கிசு”வில் சிக்கினாலும் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் கட்சிக்காக தனது வாழ்க்கையை அவர் அர்ப்பணித்தார்.

காங்கிரஸ் கட்சிக்காக அவர் தேர்தல் பிரசாரமும் செய்தார். இதனால் திரைஉலகை போல காங்கிரஸ் கட்சியில் அவர் தனக்கென ஒரு இடத்தை பெற்றார். இதன்மூலம் காங்கிரஸ் அவருக்கு மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியை கொடுத்து அழகு பார்த்தது.

நீண்ட நாட்கள் கட்சியில் இருப்பதால் தனக்கு எம்.பி. அல்லது எம்.எல்.ஏ பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் அதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் தற்போது நடைபெற உள்ள மேல்-சபை எம்.பி. தேர்தலில் எப்படியும் கட்சி மேலிடம் தனக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கும் என எதிர்பார்த்து காத்து இருந்தார். ஆனால் கடைசியில் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

நேற்று வெளியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் நடிகை நக்மா பெயர் இடம் பெறவில்லை.

தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ப,சிதம்பரம் உள்ளிட்ட 10 பேர் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இத்தனை ஆண்டு கட்சிக்காக உழைத்தும் தன்னை மேலிடம் “கை” விட்டு விட்டதே என நக்மா கண்ணீர் மல்க தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் இன்று கட்சிக்கு எதிராக பகிரங்கமாக டுவிட்டர் பதிவு வெளியிட்டு உள்ளார்.

அந்த டுவிட்டர் பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-

2004-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த போது எனக்கு மேல்சபை எம்.பி. பதவி கொடுக்கப்படும் என சோனியா காந்தி உறுதி அளித்தார். அதன்பேரில் நான் அக்கட்சியில் இணைந்தேன்.

ஆனால் உறுதி அளித்த படி இன்னும் எனக்கு எம்.பி பதவி கொடுக்கவில்லை, 18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்தும் எனக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ஏன்? மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தற்போது இம்ரானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அவரை விட எனக்கு எந்த விதத்தில் தகுதி குறைச்சல் உள்ளது. 18 ஆண்டு காலம் தவம் இம்ரான் முன் பொய்த்து விட்டது.

இவ்வாறு நக்மா தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

அவரின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை நக்மா தற்போது ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் புதுவை மாநிலங்களுக்கு மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக உள்ளார். மேலும் மும்பை காங்கிரஸ் துணை தலைவராகவும் உள்ளார்.

கடந்த 2004-ம் ஆண்டு நக்மாவை முதலில் பாரதிய ஜனதா தங்கள் கட்சியில் சேருமாறு அணுகியது. அப்போது நடந்த பாராளுமன்ற தேர்தலில் அவரை ஜதராபாத் தொகுதியில் நிறுத்துவதற்கான முயற்சியையும் மேற்கொண்டது.

ஆனால் அதனை அவர் ஏற்காமல் காங்கிரஸ் மீது இருந்த ஈர்ப்பு காரணமாக காங்கிரசில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது கட்சி மீது அவர் பரபரப்பான குற்றச்சாட்டினை தெரிவித்து உள்ளதால் அவர் கட்சியில் தொடர்ந்து நீடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரை பா.ஜனதாவில் இழுப்பதற்கான முயற்சியில் மீண்டும் அக்கட்சி ஈடுபடலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக், பிரமோத் திவாரி ஆகிய 3 பேர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் இந்த 3 பேரும் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் கிடையாது. இதனால் ராஜஸ்தானை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக அக்கட்சியை சேர்ந்த பவன் கேரா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், என்னுடைய தவம் எதுவும் தவறி இருக்கலாம் என தனது அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார்.

ராஜஸ்தானில் இருந்து எந்த ஒரு காங்கிரஸ் தலைவரும் வேட்பாளராக நிறுத்தப்படாததற்கு என்ன காரணம் என்பதை காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என அக்கட்சி எம்.எல்.ஏ.சன்யம் லோதா கேள்வி எழுப்பி உள்ளார்.

இதே போல பலரும் தங்கள் எதிர்ப்பை காட்டி உள்ளனர்.

காங்கிரசில் நிலவும் கோஷ்டி பூசலை ஒழிக்கும் வகையில் ஜி-23 எதிர்ப்பு அணி தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்டவர்களுக்கு எம்.பி. பதவி கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கும் இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.

இந்த அணியில் கபில்சிபல் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார். அவருக்கு அக்கட்சி சார்பில் மேல்சபை எம்.பி. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.