ஸ்ரீசைலம் கோவிலுக்கு சென்று திரும்பிய போது விபத்து: வேன்-லாரி மோதி 7 பக்தர்கள் பலி..!!
ஆந்திரா மாநிலம் குண்டூரில் இருந்து 35 பேர் ஆந்திராவில் உள்ள கோவில்களில் தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் வேன் மூலம் புறப்பட்டனர். நேற்று ஸ்ரீசைலம் சிவன் கோவிலில் தரிசனம் செய்தனர். நேற்று இரவு தரிசனம் முடித்து ரெண்ட சிந்த்தலா சாலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் வேன் வந்து கொண்டு இருந்தது.
இரவு நேரம் என்பதால் வேனில் இருந்தவர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.அப்போது சாலையோரம் சிமெண்டு ஏற்றி வந்த லாரி நிறுத்தப்பட்டு இருந்தது. எதிர்பாராதவிதமாக லாரியின் பின்புறம் வேன் பயங்கரமாக மோதியது.
இதில் வேன் நொறுங்கி சாலையில் கவிழ்ந்தது. வேனில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்து அலறி கூச்சலிட்டனர்.
அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் இடிபாடுகளில் சிக்கி 7 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கோடீஸ்வரி (45), ரோசயம்மா (65), ரமாதேவி (50), கோட்டம்மா (50), ரமணா (50), லட்சுமி நாராயணா (30), பத்மா (38) என தெரியவந்தது.
விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் நசரத்பேட்டை, குண்டூர் அரசு ஆஸ்பத்திரிகளில்சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.