’தோட்டங்களில் பட்டினி சாவை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ !!
இன்னமும் சில மாதங்களில் பட்டினி சாவு வரலாம். இதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கவேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரசிங்கவிடம் வலியுறுத்தியுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், தோட்டங்களில் பட்டினி சாவை தடுக்கவேண்டுமாயின், தரிசு காணிகளைப் பிரித்த தொழிலாளருக்கு வழங்குங்கள் அத்துடன், நாட்டின் உணவு தேவைக்கும் தொழிலாளர்களால் பங்களிப்பை வழங்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
உரம் இல்லாததால், நெல் விளைச்சல், உள்நாட்டு நெல் விளைச்சல், அரிசி இல்லை எனத் தொடர்ந்துகொண்டே போகிறது. உரப்பிரச்சினை தேயிலை உற்பத்தியையும் பாதித்துள்ளது. தோட்டங்களில் வேலை இல்லை. ஆகவே வருமானம் இல்லை. உணவுக்காக, அரிசி, கோதுமை வாங்க பணமுமில்லை. கடைகளில் பொருளுமில்லை என பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தோட்டங்களில் காணப்படும் பயிரிடப்படாத தரிசு நிலங்களை பிரித்து, தோட்டங்களில் நிரந்தரமாக உழைக்கும் மக்களுக்கு வழங்கும்படி நான் உங்களை வேண்டுகிறேன். விவசாய அமைச்சின் அனுசரணையும் இவர்களுக்கு வழங்க சொல்லுங்கள். இந்நிலங்களில் குறுகிய காலத்தில் பயன் தரும் விளைபயிர்களை தொழிலாளர்கள் பயிரிட்டு தங்கள் தங்கள் வீட்டு தேவைகளுக்கு பெற்றுக்கொள்வார்கள். அதேபோல் நாட்டின் உணவு தேவைக்கும் இந்த பயிரிடல் பங்களிப்பை வழங்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா, கொழும்பின் அவிசாவளை, பதுளை, இரத்தினபுரி, கண்டி, கேகாலை, மாத்தளை, களுத்துறை, காலி, மாத்தறை, மொனராகலை, குருநாகலை ஆகிய மாவட்ட பெருந்தோட்டங்களில் வாழும் உழைக்கும் மக்கள் வருமானமின்றி நிர்க்கதி நிலையில் ஏற்கெனவே பெரும் துன்பங்களை சந்தித்து வருகிறார்கள். நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடியினால், இன்னமும் சில மாதங்களில், உண்ண உணவின்றி நம் நாட்டில் பட்டினி சாவை சந்திக்க கூடியவர்களாக கணிக்க கூடியயோர் பட்டியலில் முதன்மை நிலையில் பெருந்தோட்டங்களைச் சேர்ந்தவர்களே இருப்பர் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.