மத்திய அரசு திட்டங்களால் பயன் அடைந்த மக்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்..!!
மத்திய அரசின் 9 அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூலம் செயல்படுத்தப் பட்டுள்ள 16 திட்டங்களின் மூலம் பயன் அடைந்த பொதுமக்களுடன், இமாச்சல் பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார்.
பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு நிதி திட்டம் , பிரதமரின் இலவச சமையல் எரிவாயு திட்டம், ஊட்டச்சத்து இயக்கம், பிரதமரின் மகப்பேறு உதவித்திட்டம், தூய்மை இந்தியா இயக்கம் உள்ளிட்ட திட்டங்களின் தாக்கம் குறித்து, பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாட உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிகழ்ச்சியின் போது நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கி வரும் நிவாரண உதவித் திட்டத்தின் கீழ் 11-வது தவணையாக ரூ.21,000 கோடிக்கு தொகையை பிரதமர் விடுவிக்கவுள்ளார்.
மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் வேளாண் அறிவியல் மையங்கள் வழியாக மாநில முதலமைச்சர்கள், மத்தி, மாநில அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் காணொலி மூலம் இதில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.