சமுர்த்தி கொடுப்பனவு குறித்த அறிவிப்பு!!
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிற்கு நிவாரண உதவி வழங்கல் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
அரசாங்க அதிபர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி நிவாரணம் பெறும் 78,444 குடும்பங்களிற்கு குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 1,900 ரூபா , 3,200 ரூபா , 4,500 ரூபா பெறுமதியான நிவாரண உதவிக் கொடுப்பனவு தொகையாக 225,162,020 ரூபா மாதாந்தம் சமுர்த்தி வங்கிகளினால் வழங்கப்பட்டு வருகின்றது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையினை கருத்தில் கொண்டு உலக வங்கியின் நிதி உதவியுடன் மூன்று மாதங்களுக்கு சமுர்த்தி நிவாரண உதவிக் கொடுப்பனவிற்கு மேலதிகமாக நிதிக் கொடுப்பனவாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3,100 ரூபா , 3,100 ரூபா, 3,000 ரூபா என மொத்தமாக 239,277,600 ரூபா மேலதிகமாக சமுர்த்தி வங்கிகளுக்கு 26.05.2022 ஆம் திகதி சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் வைப்பிலிடப்பட்டு மே மாத கொடுப்பனவு சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், 1-2 அங்கத்தவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 1,900 ரூபா கொடுப்பனவு 3,100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 5,000 ரூபாவாக வழங்கப்படும். 3 அங்கத்தவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 3,200 ரூபா கொடுப்பனவு 3,100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 6,300 ரூபாவாக வழங்கப்படும்.
நான்கிற்கும் மேற்பட்ட அங்கத்தவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 4,500 ரூபா கொடுப்பனவு 3,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 7,500 ரூபாவாக வழங்கப்படும்., மேலும் குறைநத வருமானம் பெறுகின்ற சமுர்த்தி நிவாரணம் பெறத் தகுதியான காத்திருப்பு பட்டியலில் உள்ள 27,978 குடும்பங்களிற்கு மூன்று மாதாங்களிற்கு 5,000 ரூபா நிதி கொடுப்பனவு சமுர்த்தி வங்கிகளினால் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவர்களுக்கான மே மாதக் கொடுப்பனவு நிதி சமுர்த்தி வங்கிகளிற்கு இன்று வைப்பிலிட மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகிறது குறிப்பிடப்பட்டுள்ளது.