தனது நிலைப்பாட்டை தெரிவித்த ஜனாதிபதி!
அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை தனது பூரண சம்மதத்துடன் கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆளும் கட்சியின் பாராளுமன்ற குழுவிடம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (30) இடம்பெற்ற ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் நேற்று பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ச மற்றும் எதிர்க்கட்சியில் இருந்து வந்து அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்துக் கொண்டிருந்தனர்.
உத்தேச அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்காகவே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ 21வது திருத்தம் தொடர்பில் முதலில் விளக்கமளித்திருந்தார்.
இரட்டைக் குடியுரிமையை நீக்குதல் உள்ளிட்ட 21வது திருத்தச் சட்டத்தின் உள்ளடக்கங்கள் குறித்து அமைச்சர் விரிவாக எடுத்துரைத்தார்.