தேர்தலுக்கு செல்வதே ஒரே வழி – கிரியெல்ல!!
பொருளாதார, அரசியல் மறுசீரமைப்பை செய்யாதவரையில் நாட்டுக்கு ஐ.எம்.எப் உதவி கிடைக்கப்போவதில்லை. தேர்தல் ஒன்றின் ஊடாக அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் மாத்திரமே அந்த அரசாங்கத்துக்கு சட்ட அங்கீகாரமும், உலக நாடுகளின் அங்கீகாரமும் கிடைக்கும் எனவும், நாட்டின் பிரச்சினையை தீர்க்க தேர்தல் ஒன்றே தீர்வு என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்சமன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்தார்.
நாடு தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளை நாம் முன்கூட்டியே கூறியிருந்தோம். எனினும் அரசாங்கம் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது நாட்டில் டொலரும் இல்லை, ரூபாயுமில்லை. ஆனாலும் நாட்டுக்கு டொலர் வருமென அரசாங்கம் கனவு காண்கிறதாகவும் தெரிவித்தார்.
இலங்கைக்கு பொருளாதார நிவாரணங்களை வழங்குவது தொடர்பில் இதுவரையில் கலந்துரையாடல்களைக்கூட மேற்கொள்ளவில்லை என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து ஜனாதிபதி கடந்த காலங்களில் பல நிவாரணங்களை பெற்றுக்கொண்டுள்ளார். இவை அனைத்தும் சில்லறை நிவாரணங்களே. நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான நிவாரணங்கள் இதுவரையில் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
பொருளாதாரத்தை மீள் சீரமைப்பு செய்ய வேண்டும், நாட்டின் வருமானத்தை விட செலவு மூன்று மடங்காக இருக்கிறது எனவே இதனை எவ்வாறு குறைப்பது என்கிற யோசனைகளை முன்வைக்க வேண்டுமென இரு பிரதான காரணங்களை உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பன அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகின்றன எனவும் தெரிவித்தார்.
பொருளாதார, அரசியல் மறுசீரமைப்பை நாட்டுக்குள் செய்யாதவரையில், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நிவாரணங்களை உலக நாடுகள் வழங்கப்போவதில்லை. சர்வதேசம் மட்டுமல்லாது நாட்டு மக்களும் அரசியல் மறுசீரமைப்பையே கோருகிறார்கள் எனவும் தெரிவித்தார்.சில்லறைத்தனமான நிவாரணங்களை வெளிநாடுகள் வழங்கினாலும், நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான நிவாரணத்தை சர்வதேச நாணய நிதியத்தாலேயே வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.