;
Athirady Tamil News

மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனுவை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்..!!

0

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவையில் நாடு முழுவதும் காலியாகும் 57 இடங்களுக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் கர்நாடகத்தில் 4 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வந்தது. காங்கிரஸ் வேட்பாளர்கள் ஜெய்ராம் ரமேஷ், மன்சூர் கான் ஆகியோர் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் ஆகும். இந்த கடைசி நாளில் பா.ஜனதா மற்றும் ஜனதா தளம் (எஸ்) வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.

பா.ஜனதா வேட்பாளர்களான மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெகர்சிங் ஆகியோர் விதான சவுதாவில் சட்டசபை செயலாளர் விசாலாட்சியிடம் மனு தாக்கல் செய்தனர். நிர்மலா சீதாராமன் மனு தாக்கல் செய்தபோது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல், சட்டத்துறை மந்திரி மாதுசாமி ஆகியோர் உடன் இருந்தனர். அதேபோல் நடிகர் ஜக்கேஷ், லெகர்சிங் ஆகியோர் மனு தாக்கல் செய்தபோதும் நளின்குமார் கட்டீல் உள்பட மந்திரிகள் உடன் இருந்தனர்.

அதைத்தொடர்ந்து ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் குபேந்திரரெட்டி மனு தாக்கல் செய்தார். அவர் மனு தாக்கல் செய்தபோது, சட்டசபை ஜனதாதளம்(எஸ்) கட்சி துணைத்தலைவர் பண்டப்பா காசம்பூர், ஏ.டி.ராமசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர். சட்டசபையில் கட்சிகளின் பலத்தின் அடிப்படையில் இந்த தேர்தல் நடக்கிறது. ஒரு வேட்பாளர் வெற்றி பெற 45 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அதன்படி பா.ஜனதாவுக்கு 2 இடங்களும், காங்கிரசுக்கு ஒரு இடமும் கிடைப்பது உறுதியாகிவிட்டது. அந்த 3 இடங்களுக்கு பா.ஜனதா வேட்பாளர்கள் நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ் மற்றும் காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது.

4-வது இடத்திற்கு தேவையான வாக்குகள் எந்த கட்சியிடமும் இல்லை. ஆனாலும் அந்த இடத்திற்கு ஆளும் பா.ஜனதா சார்பில் லெகர்சிங்கும், காங்கிரஸ் சார்பில் மன்சூர் கானும், ஜனதா தளம்(எஸ்) சார்பில் குபேந்திரரெட்டியும் களம் இறங்கியுள்ளனர். இந்த 3 கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சி இன்னொரு கட்சியை ஆதரித்தால் மட்டுமே 4-வது இடத்திற்கான வேட்பாளர் வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால் மூன்று கட்சிகளுமே வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதால் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் 2-வது வேட்பாளரை நிறுத்தியுள்ளது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள ஜனதா தளம்(எஸ்) மூத்த தலைவர் ரேவண்ணா, ‘மாநிலங்களவை தேர்தலில் 4-வது இடத்திற்கு தங்கள் கட்சி வேட்பாளரை ஆதரிக்குமாறு சோனியா காந்தியை தேவகவுடா தொடர்பு கொண்டு பேசி ஆதரவு கேட்டார். ஆதரவு வழங்குவதாக அவர் உறுதியளித்தார். அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலை குமாரசாமி தொடர்பு கொண்டு பேசி ஆதரவு கேட்டார். அவர் சாதகமான பதிலை கூறினார். மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரிடமும் பேசினோம். ஆனால் காங்கிரஸ் கட்சி இப்போது திடீரென 2-வது வேட்பாளரை நிறுத்தியுள்ளது சரியல்ல’ என்றார்.

காங்கிரஸ் மேலிட தலைவர்கள், பா.ஜனதாவை தோற்கடிக்கும் நோக்கத்தில் மதசார்பற்ற கட்சியான ஜனதா தளம்(எஸ்) கட்சியை ஆதரிக்கும் மனநிலையில் இருந்தாலும், அதற்கு இங்குள்ள முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கர்நாடகத்தை பொறுத்தவரையில் தென் கர்நாடக பகுதியில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. சமீபகாலமாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, காங்கிரசையும், சித்தராமையாவையும் மிக கடுமையாக விமர்சித்து வருகிறார்.

அதனால் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு வழங்கவே கூடாது என்பதில் சித்தராமையா பிடிவாதமாக உள்ளார். அவரது வற்புறுத்தலின் பேரிலேயே காங்கிரஸ் 2-வது வேட்பாளரை களம் இறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 4-வது இடம் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஒருவேளை பா.ஜனதா ஆதரித்தால் அக்கட்சி வெற்றி பெறும். ஜனதா தளம்(எஸ்) கட்சியை ஆதரிக்கும் மனநிலையில் பா.ஜனதா இல்லை என்றே சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கர்நாடகத்தில் மாநிலங்களவை தேர்தலில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று (புதன்கிழமை) மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது.

கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார். நேற்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதனுடன் தனது சொத்து விவரங்களையும் தாக்கல் செய்துள்ளார். அதில் வருமான வரி தாக்கல் செய்த விவரங்களை குறிப்பிட்டுள்ளார். அதன்படி கடந்த 2016-17-ம் ஆண்டு ரூ.5 லட்சத்து 85 ஆயிரத்து 580, 2017-18-ம் ஆண்டு ரூ.6 லட்சத்து 16 ஆயிரத்து 630, 2018-19-ம் ஆண்டு ரூ.10 லட்சத்து 62 ஆயிரத்து 250, 2019-20-ம் ஆண்டு ரூ.10 லட்சத்து 38 ஆயிரம், 2020-21-ம் ஆண்டு ரூ.8 லட்சத்து 8 ஆயிரம் வருமானம் கிடைத்ததாக கூறியுள்ளார்.

தனக்கு எதிராக நிலுவையில் எந்த கிரிமினல் வழக்கும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் மொத்தம் ரூ.45 லட்சத்து 4 ஆயிரத்து 479 டெபாசிட் செய்துள்ளார். கையிருப்பு தொகை ரூ.17 ஆயிரத்து 200. ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வங்கி தனிநபர் கடன் பெற்றுள்ளார். ஒரு ஸ்கூட்டர் உள்ளது. அதன் மதிப்பு ரூ.28 ஆயிரத்து 200 ஆகும். ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 315 கிராம் தங்க நகைகள், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளன. அவரிடம் மொத்தம் ரூ.63 லட்சத்து 39 ஆயிரத்து 196 அளவுக்கு அசையும் சொத்துகள் உள்ளன.
அவரிடம் தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் குன்ட்லூர் கிராமத்தில் 4,806 சதுர அடி நிலம் உள்ளது. அதன் இன்றைய மதிப்பில் ரூ.17 லட்சத்து 8 ஆயிரத்து 800 ஆகும். அவரிடம் மொத்தம் ரூ.1 கோடியே 87 லட்சத்து 60 ஆயிரத்து 200 அசையா சொத்துகள் உள்ளன. ரூ.30 லட்சத்து 44 ஆயிரத்து 838 அளவுக்கு கடன் உள்ளது. நிர்மலா சீதாராமனுக்கு அசையும், அசையா சொத்துகள், டெபாசிட் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 கோடியே 79 லட்சத்து 35 ஆயிரத்து 75 ஆகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.