மருந்து தட்டுப்பாட்டை தீர்க்க கோப்குழுவின் பரிந்துரை !!
இந்திய கடனுதவி மற்றும் ஏனைய கடனுதவிகளைப் பயன்படுத்தி நாட்டிலுள்ள மருந்துப் பற்றாக்குறையை விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் பரிந்துரை வழங்கினார்.
2022ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி வரையில் அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துப் பற்றாக்குறை குறித்தும், அதனை நீக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கை அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த போதே அவர் இந்தப் பரிந்துரையை வழங்கினார்.
இந்தியக் கடனுதவியில் 200 மில்லியன் டொலர் நிதியுதவி கிடைக்கப்பெற்றிருந்தாலும் 2022 ஏப்ரல் 22 ஆம் திகதி வரையில் 55.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ உபகரண வழங்கல்களுக்கு மாத்திரமே அமைச்சின் மருத்துவ உப குழுவினால் பரிந்துரை வழங்கப்பட்டிருந்ததாக கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
அது நிதியுதவியின் 28% எனவும், 2022 மே 18 ஆம் திகதி வரை 92.2 மில்லியன் அமெரிக்க டொலருக்கு அதிகமான விலைப்பட்டியல் மாத்திரம் பரிந்துரை செய்யப்பட்டிருந்தமை குழுவின் தலைவரால் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.
இந்திய கடனுதவிக்கு மேலதிகமாக, மருந்துப் பொருட்கள் பெற்றுக்கொள்வதற்குக் கிடைத்துள்ள உலக வங்கிக் கடன் (WB), உலக சுகாதார ஸ்தாபனத்தின் உதவி (WHO), ஆசிய அபிவிருத்தி
வங்கியின் உதவி (ADB) மற்றும் ஏனைய நன்கொடையாளர்களிடமிருந்து கிடைத்துள்ள உதவிகளை விரைவாகப் பயன்படுத்தாமை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
விஷேடமாக இந்தியக் கடனுதவி உள்ளிட்ட இந்த அனைத்து உதவிகளும் 330 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகம் எனவும் அவை இதுவரை செலவு செய்யப்படவில்லை என்பது இங்கு புலப்பட்டது.
விரைவில் நிர்வாகத் தீர்மானங்கள் மற்றும் அனுமதியைப் பெற்று இந்த நிதியைப் பயன்படுத்தி மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்தால் 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை மருந்துப் பற்றாக்குறை ஏற்படாது என வருகை தந்திருந்த உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.