’சிஸ்டத்தை 21 ஆல்,மாற்ற முடியாது’ !!
நாட்டின் தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நடைமுறைச் சாத்தியமுள்ள வழிகளைக் கண்டறிந்து செய்றபடுத்த வேண்டும் என தெரிவிக்கு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ, நாட்டின் முறைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். எனினும் 21ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக முழுமையாக அதனை செய்ய முடியாது எனவும் தெரிவித்தார்.
21ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ராமஞ்ஞ மாநாயக்க தேரருக்கு விளக்கமளித்தப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், கடந்த நவம்பர் மாதத்திலிருந்து நாட்டின் பொருளாதாரத்தை இவ்வருடம் ஏப்ரலுக்குப் பின்னர் முன்கொண்டு செல்ல முடியாதென நான் தொடர்ந்து கூறிவந்தேன். மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதியின் செயலாளராக பி.பி.ஜயசுந்தர ஆகியோரை நியமிக்கும்போதே நாட்டின் பொருளாதாரம் சரிவை சந்திக்குமென உறுதியாக தெரிந்தது எனவும் தெரிவித்தார்.
இரட்டைக் குடியுரிமை அழுத்தத்தால் அமைக்கப்பட்ட அமைச்சரவையும் நீண்ட காலத்துக்கு செல்லாதென நான் தெரிந்துக்கொண்டேன். இதனாலேயே நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சர்வ கட்சி கொண்ட அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டுமென கூறிவந்தேன். எனினும் அப்போது அரசாங்கத்துக்கு எதிராக எவரும் வீதிக்கு இறங்கி போராடவில்லை. தற்போது போராடும் இளைஞர்கள், எங்களால் செய்ய முடியாதப் பலவற்றை சாதித்துக் காட்டினார். பலவற்றில் அவர்கள் வெற்றியும் கண்டார்கள் எனவும் கூறினார்.
ஜனாதிபதிக்கு எந்தவொரு அமைச்சுப் பதவிகளையும் வழங்கக்கூடாது. இதனை 21ஆவது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக வலியுறுத்த வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி கூறுகிறது. எவ்வாறாயினும் ஜனாதிபதியே நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பொறுப்புக்கூற வேண்டுமென அரசியலமைப்புக் கூறுகிறது. உயர்நீதிமன்றமும் பாதுகாப்பு அமைச்சு வேறொருவருக்கு வழங்கப்படக்கூடாது எனவும், ஜனாதிபதி வசமே பாதுகாப்பு அமைச்சுக் காணப்பட வேண்டுமெனவும் வியாக்கியானம் வழங்கியுள்ளது என்றார்.
நாட்டில் அராஜாக நிலையொன்று ஏற்பட்டு சில நாட்கள் நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லாதிருந்தது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி இல்லை என்றால் நாட்டை எவ்வாறு நடத்தி செல்வது? என்பது தொடர்பில் பிரச்சினை காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்.21ஆவது திருத்தச் சட்டத்தை ஆரம்பமாகக் கொண்டு நாட்டுக்குப் பொறுத்தமான புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.