சர்வதேச நிதி உதவிகளை பெற்றுக்கொள்ள தீவிர முயற்சியில் அரசாங்கம் !!
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும்,உணவுப்பஞ்சத்தை தவிர்க்கும் விதமாக பெரும்போகம் மற்றும் சிறுபோக விளைச்சலுக்கான உரத்தை பெற்றுக்கொள்ளவும் அரசாங்கம் சர்வதேச தரப்புடன் தீவிரமாக கலந்துயாடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சர்வதேச தரப்புடன் மேற்கொண்டுள்ள பேச்சுவார்த்தைகளில் பல்வேறு இணக்கப்பாடுகளை எட்டியேனும் உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் அமைச்சரவைக்கு அறிவுரை வழங்கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் இறுதியாக கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போதும், நாட்டின் நெருக்கடி நிலைமைகள் குறித்து பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளதுடன், நெருக்கடியை தவிர்க்க பல்வேறு மாற்று வேலைத்திட்டங்களை கையாள வேண்டியுள்ளதாவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகளின் போதும் இலங்கையின் சார்பில் முன்வைக்கவுள்ள பரந்துபட்ட வேலைத்திட்டம் குறித்தும், பொது இணக்கப்பாடுகள் குறித்தும் உடனடியாக தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளதாகவும், தொழிநுட்ப பேச்சுவார்த்தையை அடுத்த வாரத்தில் இருந்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டியுள்ளதாகவும், இம்மாத இறுதிக்குள் பொது இணக்கப்பாடு ஒன்றினை எட்ட வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை வட்டாரங்களில் அறிய முடிகின்றது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க குறைந்தபட்சம் 3 தொடக்கம் 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும், அதனை பெற்றுக்கொள்ள சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியாக வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளாராம். எனினும் தொழிநுட்ப பேச்சுவார்த்தைகள் முடிவியும் வரையில் இது குறித்து உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இந்நிலையில் உணவுப்பஞ்சம் ஒன்றினை நாடு எதிர்கொண்டு வருகின்ற நிலையில் விவசாயத்தை உடனடியாக மீட்டெடுக்க தேவையான உர மானியங்களை உலக வங்கியிடமும், இந்தியாவிடமும் கோரியுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். குறிப்பாக பெரும்போகதிற்கு தேவையான யூரியா உரத்தினை வழங்க உலக வங்கி இணங்கியுள்ளதாகவும், சிறுபோகத்திற்கு தேவையான உரம் இந்தியாவில் இருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.