யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம்!! (படங்கள்)
யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்று (03.06.2022) காலை 09.30 மணிக்கு மாவட்டச்செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இவ் விவசாயக் குழுக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், மற்றும் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், வங்கி முகாமையாளர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
மேலும், வங்கிகள் விவசாயிகளுக்கு கடனுதவிகளை வழங்குதல், பயிர்செய்கைகளுக்கான கால அட்டவணைகளை மாற்றுதல், உணவுப்பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்தில் உணவு வீண்விரயத்தை குறைத்து வீட்டுத்தோட்ட உற்பத்திகளை அதிகரித்தல், விதைகளின் தேவைப்பாடு, விதை நெல் தேவைப்பாடு மற்றும் விதை நெல் விலையை தீர்மானித்தல் , தென்னந்தொழிற்சாலை உற்பத்திகளை ஊக்குவித்தல் , சிறு போக மற்றும் பெரும்போக பசளைகளின் தேவை ஆகியன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
மேலும், மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் கண்காணிப்பு பொறிமுறை ஊடாக மண்ணெண்ணை விநியோகித்தல் தொடர்பாக தீர்மானிக்கப்பட்டதுடன், மாவட்டத்தில் பாலின் விலையை நிலையாக பேணுதல், உள்ளூரில் பால் உற்பத்திகளை அதிகரித்தல், உள்ளூரில் கால்நடை தீவனத்தை பெற்றுக்கொள்வதற்குரிய நடைமுறைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் மக்களுக்குரிய அத்தியாவசிய பொருட்களை நியாயமான விலையில் கிடைக்க உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”