ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை தேடாதீர்கள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்..!!
ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை ஏன் தேட வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கேள்வி எழுப்பியுள்ளார்.
உ.பி., மாநிலம் வாரணாசியில் இருக்கும் ஞானவாபி மசூதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில், நடத்தப்பட்ட ஆய்வில், சிவலிங்கம் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்ந்து நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள மசூதிகளிலும் இதுபோன்ற ஆய்வை நடத்த வேண்டும் என இந்து அமைப்புகள் குரல் கொடுத்தனர்.
இந்த விவகாரம் குறித்து நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஞானவாபி சர்ச்சை சில நம்பிக்கை சிக்கல்களை உள்ளடக்கியது. இதனை இரு சமூகத்தினரும் பேசிதான் தீர்த்து கொள்ள வேண்டும். நீதிமன்றத்தின் வாயிலாக முடிவு வந்தால், அதனை இரு தரப்பினரும் ஏற்று கொள்ள வேண்டும். ஞானவாபி பிரச்னையின் வரலாற்றை நாம் மாற்ற முடியாது. அதனை, இன்றைய ஹிந்துக்களோ அல்லது இஸ்லாமியர்களோ செய்யவில்லை. இந்த விவகாரம் எப்போதோ நடந்தது.
இந்தியா மீது படையெடுத்த வந்தவர்கள், இங்கிருந்தவர்கலின் மன உறுதியை குழைக்க கோவில்களை இடித்தனர். ஆனால் இப்போது அப்படி இல்லை. ஹிந்துக்கள், முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல. பண்டைய காலத்தில் முஸ்லிம்களும், ஹிந்துக்கள் தான் என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.
தினமும் புதிய புதிய பிரச்னைகளை வெளிக்கொண்டு வரக்கூடாது. பிரச்னையை நாம் ஏன் பெரிதாக்க வேண்டும். ஹிந்துக்கள் எந்தவொரு பிரச்னையை எழுப்பும் முன்னர், முஸ்லிம்களும் நமது மக்கள்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் நம்பிக்கை மட்டுமே மாறியுள்ளது. அவர்கள் திரும்பி வர தயாராக இருந்தால், திறந்த மனதுடன் வரவேற்க வேண்டும். அவர்கள் விரும்பாவிட்டாலும், நாம் அதிருப்தி அடைய தேவையில்லை. இதை வைத்து ஒவ்வொரு மசூதியிலும் நாம் சிவலிங்கத்தை தேடிக்கொண்டிருக்க கூடாது.
இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.