சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலங்களில் சுரங்கங்கள், தொழிற்சாலைகள் கூடாது – சுப்ரீம் கோர்ட்..!!
நாடு முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் மரங்களை வெட்டுவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட டி.என்.கோதவர்மன் வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக அவ்வபோது இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வந்தன. இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் மற்றும் அனுராதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு முக்கிய உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.
அதன்படி, நாட்டில் உள்ள ஒவ்வொரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலத்தை (Eco-Sensitive Zones) கொண்டிருக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலங்கள் 1 கி.மீ. அளவுக்கு இருக்க வேண்டும். சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலங்களில் நிரந்தர கட்டுமானங்கள் இருக்கக் கூடாது. அங்கு சுரங்கம் தோண்டுவதற்கு அனுமதி கிடையாது. மேலும் அத்தகைய மண்டலங்களில் உள்ள கட்டுமானங்கள் குறித்த பட்டியலை தயாரித்து, 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு ஒவ்வொரு மாநில தலைமை வனப்பாதுகாவலர்களுக்கும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.