எறும்பு கடித்து 3 நாட்களே ஆன சிசு மரணம்!!

உத்தர பிரதேச அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை எறும்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், முதாரி ஊரைச் சேர்ந்தவர் சுரேந்திர ரைக்வார். இவர் கடந்த மாதம் 30ம் திகதி தனது கர்ப்பிணி மனைவியை மஹோபா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதையடுத்து, பிறந்த குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தால் மருத்துவர்கள் குழந்தையை சிறப்புப் பிரிவில் அனுமதித்துள்ளனர். அந்த சிறப்பு வார்டு அழுக்காகவும், எறும்புகள் அதிகமாகவும் இருந்துள்ளது. இதனால் குழந்தையின் பெற்றோர் இது குறித்து மருத்துவர்களிடம் முறையிட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் இதை அலட்சியமாக எடுத்துக் கொண்டுள்ளனர். இதையடுத்து குழந்தை பிறந்து மூன்று நாட்கள் கழித்து இறந்துள்ளது. இது குறித்து மருத்துவர்கள் குழந்தையின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்து போலிஸார் அங்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது குழந்தையின் உறவினர்கள் எறும்பு கடித்ததால்தான் உயிரிழந்துள்ளது என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து போலிஸார் அவர்களை அங்கிருந்து கலையச்செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.