சாய்ந்தமருது பகுதியில் விழிப்பூட்டல் செயல்திட்டம்!!
கல்முனை பிராந்திய சுகாதார பணிமனைக்குட்பட்ட பகுதிகளில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று (4) முதல் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கமைய இப் பிரதேசத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நுளம்புகள் ஆய்வின் போது நுளம்புகளின் செறிவு அதிகமாக காணப்படுவதால் தங்களது வீட்டை சுற்றிலும் அதனை சூழவுள்ள இடங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் யூ.எல்.எம். நியாஸ் கேட்டுள்ளார்.
குறித்த விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டமானது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஐ.எல்.எம். றிபாஸ் வழிகாட்டலில் கல்முனை பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ஏ சி.எம் பஸால் அறிவுறுத்தலில் இடம்பெற்றது.
இதன் போது வீடு வீடாக சென்ற பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தலைமையிலான குழுவினர் பரிசோதனையின் போது நுளம்பு பெருகுவதற்கு ஏதுவான இடங்கள் கண்டுபிடிக்கப்படுமாயின் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டதோடு தங்களது வீட்டையும் அதனை சூழவுள்ள இடங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தினார்.
மேலும் எதிர்வரும் மழை காலங்களில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரிக்கும் என்பதுடன் நுளம்புகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த தங்கள் வீடுகள் வளைவுகளை சுத்தம் செய்வதோடு தங்கள் வீடுகளில் காணப்படும் நுளம்புகள் பெருவதற்கு ஏதுவான பொருட்கள் அழிக்குமாறு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தலைமையிலான பணியாளர் குழு மக்களை கேட்டுள்ளனர்.