;
Athirady Tamil News

கச்சதீவு சூறையாடுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது – அகில இலங்கை தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு!! (படங்கள், வீடியோ)

0

கச்சதீவு என்பது எமது நாட்டிலுள்ள வளமிக்க ஒரு தீவு. எனவே எமது நாட்டிலுள்ள ஒரு தீவை கையகப்படுத்துதை சூறையாடுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என அகில இலங்கை தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இன்றைய தினம் இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வின்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் இந்தியாவிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சூழ்நிலையில் எமது தொப்புள்கொடி உறவான தமிழ்நாடு அரசு எமக்கு உதவி செய்வதுபோல் உதவி செய்து உதவி பொருட்களை அன்பளிப்பாகக் கொடுத்து விட்டு அந்த சந்தர்ப்பத்தில் கச்சத்தீவு பிரச்சினையை ஒரு முக்கியமாக எடுத்துக் கொண்டு இருப்பது கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

மோடி தமிழகத்திற்கு வந்தபோது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கச்சதீவு பெறுவதற்கு இதுவே ஒரு தகுந்த தருணம் என வேண்டுகோளொன்றை முன்வைத்திருந்தார். அப்படியானால் எமது நாடு வீழ்ச்சி அடைந்து செய்வதறியாமல் தவிர்த்து கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்திலே எரிகிற வீட்டில் பிடுங்குவது போல மு.க.ஸ்டாலின் இந்த கச்சதீவை புடுங்கி எடுக்கலாம் என யோசிக்கிறார். அது ஒருபோதும் ஏற்க முடியாது அது ஒரு மிகவும் மோசமான முடிவாகும்.

இந்திய இலங்கை மீனவர்களுக்கு இடையே இழுவைமடித் தொழில் தொடர்பில் ஒரு பிரச்சனை இருக்கும் நிலையில் தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் கச்சதீவினை பெற்றுவிட்டால் தங்களுடைய மீனவர்கள் பிரச்சினை தீர்ந்துவிடும் தங்களுடைய மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடிப்பார்கள் என்று சொன்னால் அதன் கருத்து என்னவென்றால் இன்னும் எமது கடற்பரப்பில் வந்து தமது வாழ்வாதாரத்தை வளங்களை சூறையாடி எங்கள் தொழில் உபகரணங்கள் அறுத்து நாசப்படுத்தி கொண்டு செல்லலாம் என்ற ஒரு முழுமையான கருத்தை வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் தனது கருத்தினை முழுமையாக பரிசோதனை செய்து
இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையிலான இழுவைமடிப் பிரச்சினையை கையில் எடுத்து அதற்கு முதல் தீர்வு காண வேண்டும். கச்சதீவு என்பது ஒரு மீனவர்களுக்கான பிரச்சனையல்ல இரு நாடுகளுக்குமிடையிலான பிரச்சனை என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.