’பணயக் கைதியாக புதிய பிரதமர் ரணில்’ !!
ஜனாதிபதி, இந்த இக்கட்டான காலச் சூழலைத் தாண்டுவதற்கு புதிய பிரதமரை பணயக் கைதியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பாங்கில் செயற்படுகின்ற அரசியல் நடவடிக்கையையே தற்பொழுது காண்கின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
19ஆவது திருத்தத்தின் உண்மையான உள்ளடக்கங்களை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து இன்னும் ஆட்சியில் நீடித்து கொள்வதற்கான கபடத்தனமான இந்த ஆட்சிக்குப் புதிய பிரதமரும் இணங்கிப் போவாராக இருந்தால் அவரது நிலைமையும் விபரீதமானதாக ஆகிவிடும் என்றும் எச்சரித்தார்.
நாகவில்லு (எருக்கலம்பிட்டி) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவும்,இளைஞர் காங்கிரஸும் இணைந்து, புத்தளம் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (05), நடாத்திய கட்சியின் விசேட ஒன்றுகூடல் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய பின்னர் , ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, “அடிப்படைத் தேவைகள் பற்றிய விடயங்களில் கூட இன்னும் சரியான முடிவில்லாமல், நீண்ட வரிசைகளில் மக்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலவரம் குறித்து மிகவும் கவலையாக இருக்கிறது.
அதே நேரம் உணவு பஞ்சம் ஏற்படப் போகின்றது என்று அரசாங்க மேல் மட்டுமே அடிக்கடி சொல்கின்ற போது மக்கள் பீதியடைந்து அநேகர் இந்த நாட்டை விட்டே வெளியேறுகின்ற நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது.
இப்படி மக்களைப் பீதியில் வைத்து கொள்வதை விட்டுவிட்டு, இருக்கின்ற பதட்டத்தைத் தணிப்பதற்கும், அதேவேளை ஆக்கபூர்வமான பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அரசாங்கம் முன் வர வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து வருகின்ற உதவிகளை பெறுவதில் அரசாங்கம் காட்டுகின்ற ஆர்வத்தைப் போன்றே, இந்த நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருகின்ற அவலங்களையும், கஷ்ட நிலைமைகளையும் தீர்த்து வைப்பதற்கும் முயற்சிக்க வேண்டும்.
நிலைமையை மிகப் பக்குவமாக கையாள்வதை விடுத்து, என்னைப் பொறுத்த மட்டில் ஆட்சிக்கு வந்துவிட்டதாகச் சொல்லி கொண்டிருக்கின்ற புதிய பிரதமர், ஆளுகின்ற பொது ஜன பெரமுன கட்சியின் பணய கைதியாக இருந்துகொண்டு எவ்வளவு தூரம் இதனைச் சாதித்து முடித்துவிட முடியும் என்ற பெரிய கேள்வி என்னில் எழுகின்றது.
எனவேதான், எதிர் கட்சியினராகிய நாங்கள் மிக அவதானமாக எங்களால் முடிந்த அளவு நாங்கள் நாட்டை காப்பாற்ற வேண்டுமென்ற நல்ல நோக்கத்துடன் விடயங்களை அணுகுகின்றோம்.
அதே வேளை, வெறும் சொந்த சுய லாபங்களுக்காக ராஜபக்ஷ குடும்பத்தினரைக் காப்பாற்ற எடுக்கப்படுகின்ற அரசியல் நடவடிக்கைகளைப்பற்றி மிகவும் அவதானமாக இருக்கின்றோம்.
நாட்டு மக்களின் ஒருமித்த கோரிக்கையான ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு முதன்மை அளிக்கின்ற வகையில் செயற்பாடுகள் அமைய வேண்டும்.
குறைந்த பட்சக் காலக்கெடுவையாவது விதிக்கவேண்டும். எந்தக் காலக்கெடுவும் இல்லாமல் எந்த ஜனாதிபதி பதவியில் நீடிக்கின்றாரோ, அந்த ஜனாதிபதி சரியான கால அட்டவணை இல்லாமல் எப்படியாவது இந்த இக்கட்டான காலச் சூழலைத் தாண்டுவதற்கு புதிய பிரதமரை பணயக் கைதியாகப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பாங்கில் செயல் படுகின்ற அரசியல் நடவடிக்கையையே தற்பொழுது காண்கின்றோம்.
இதே வேளை அரசியலமைப்பின் 20ஆவது சீர் திருத்தம் மாற்றியமைக்குமாறு கூறி பல கட்சிகள் முன் வந்திருக்கின்றன.
20வது சீர்திருத்தத்தை மாற்றியமைப்பதாக ஜனாதிபதியே உத்தரவாதம் வழங்கி இருக்கின்றார். அப்படி உத்தரவாதம் வழங்கிய பின்பும் கொடுத்த வாக்குறுதியை மீறி, தனிப்பட்ட நபர்களின் தேவைகளுக்காக அரசியல் அமைப்பு சட்டத்தில் உரிய மாற்றங்களை கொண்டு வருவதை விடுத்து, 19ஆவது சீர்திருத்ததின் உண்மையான உள்ளடக்கங்களை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து இன்னும் ஆட்சியில் நீடித்து கொள்வதற்கான கபடத்தனமான ஆட்சிக்கு இந்தப் புதிய பிரதமர் இணங்கிப் போவாராக இருந்தால் அவரது நிலைமையும் விபரீதமானதாக ஆகிவிடும்“ என்றார்.