சிறைச்சாலை வெற்றுக்காணிகளில் விவசாய நடவடிக்கை !!
நாடு எதிர்கொள்ளவுள்ள உணவுப் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக சிறைச்சாலைகளில் காணப்படும் வெற்றுக் காணிகளில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், சிறைக் கைதிகளை அதற்காக பயன்படுத்த வேண்டும் எனவும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு வலியுறுத்தியுள்ளார்.
சிறைச்சாலைகளில் தொழில்துறையை மேம்படுத்த சிறைக்கைதிகளை முறையாக பயன்படுத்துவது குறித்த கலந்துரையாடல் ஒன்று நேற்று (6) நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷவிற்கும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கும் இடையில் இடம்பெற்றிருந்தது.
சிறைச்சாலைகள் திணைக்களம் மூலமாக முன்னெடுக்கப்படும் தொழில் துறையில் கைதிகளை முறையாக பயன்படுத்துவது குறித்த வேலைத்திட்டம் ஒன்றையும் இதன்போது சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவினால் நீதி அமைச்சரிடத்தில் முன்வைக்கப்பட்டது.
சிறைக் கைதிகளை விவசாயம் உள்ளிட்ட ஏனைய தொழில்களுக்கு திறம்பட பயன்படுத்துவது, எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் சிறைச்சாலை திணைக்களத்திற்கு சொந்தமான பயிரிடப்படாத நிலங்களை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துதல், தற்போதுள்ள பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மேலும் பிரயோசனமாக பயன்படுத்தும் நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துதல் மற்றும் திணைக்களத்தின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது கருத்துக்களை முன்வைத்திருந்த நீதி அமைச்சர், சிறைச்சாலைகளில் காணப்படும் வெற்று காணிகளில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க துரிதமான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும்,சிறிது காலத்தில் ஏற்படவுள்ள உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில் குறுகிய கால பயிர்ச் செய்கையை மேற்கொள்வது குறித்து சிந்திக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
பயிர்களை பயிரிடுவதற்கு துரிதமான மற்றும் வினைத்திறன்மிக்க வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் எனவும், இதற்காக விவசாயத் திணைக்களத்தின் உதவியை நாடுமாறும், கைதிகளின் உழைப்பை திறம்பட பயன்படுத்துமாறும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கீழ் உள்ள 18 சிறைச்சாலைகளில் 20க்கும் மேற்பட்ட தொழிற்துறை செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும்,அவற்றில் 13 சிறைச்சாலைகளில் கைதிகள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.