;
Athirady Tamil News

“கோட்டாபய கடற்படை” க்கு தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சி தடுக்கப்பட்டது !!

0

முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில், “கோட்டாபய கடற்படை முகாம்” அமைந்துள்ள பிரதேசத்தில், தமிழ் மக்களுக்குரிய 617 ஏக்கர் காணிகளை அளவீடுசெய்து, கடற்படையினருக்கு வழங்கும் நில அளவீட்டுத் திணைக்களத்தினரின் முயற்சியானது காணிகளுக்குரிய தமிழர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதற்கு முன்னரும் இவ்வாறு குறித்த காணிகளை அளவீடுசெய்து கடற்படையினருக்கு வழங்கும் முயற்சியில் பல தடவைகள் நில அளவீட்டுத் திணைக்களத்தினர் ஈடுபட்டிருந்தனர். நேற்றும் (07) முன்னெடுக்கப்படவிருந்த அளவீடு செய்யும் முயற்சியும், மக்களின் எதிர்பால் கைவிடப்பட்டது.

குறிப்பாக காணி உரிமையாளர்களுக்கு, காணி அளவீடு தொடர்பிலான அறிவித்தல்கள் வழங்கப்பட்டே அளவீட்டு முயற்சிகள் இவ்வாறு முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இருப்பினும் காணிகளுக்குரிய பொதுமக்களால் அம் முயற்சிகள் தொடர்ச்சியாக தடுக்கப்பட்டுவந்தன.

இந் நிலையில் இம்முறை தமக்கு, காணி அளவீடு தொடர்பிலான எவ்வித அறிவித்தல்கள் வழங்காமல் நில அளவீட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக காணி உரிமையாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.

அந்தவகையில் காணி அளவீட்டிற்கென வருகைதந்திருந்த நில அளவைத் திணைக்களத்தினரின் வாகனத்தினை கோட்டாபய கடற்படை முகாம் பிரதானவாயிலுக்கு முன்பாக வழிமறித்த காணி உரிமையாளர்கள் நில அளவைத் திணைக்களத்தினரை அங்கிருந்து செல்லுமாறும் கேட்டுக்கொண்டனர்.

அத்தோடு அறிவித்தலின்றி இவ்வாறு காணி அளவீடு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றமை தொடர்பிலும் காணி உரிமையாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.

இந் நிலையில் அப்போது நில அளவைத் திணைக்கள அதிகாரி நவஜீவன் பதிலளிக்கையில்,
‘காணிகளை கடற்படைக்கு வழங்க ஒப்புதல் வழங்கியதாக கூறப்படும், 14பேருக்கு மாத்திரமே தம்மால் அறிவித்தல் வழங்கப்பட்டது” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.