தங்கக் கடத்தல் வழக்கில் முதல் மந்திரிக்கும் தொடர்பு உள்ளது – ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம்..!!
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர்கள் ஸ்வப்னா சுரேஷ், சரித் உள்பட பலர் சிக்கினர். இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. போலீசார் உபா சட்டத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் கேரள முதல் மந்திரி பினராய் விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர், சரித்குமார், ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். ஸ்வப்னா சுரேஷ் கேரள முதல்-மந்திரியின் கட்டுப்பாட்டில் இருந்த தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வந்தவர் ஆவார். இந்தக் கடத்தலில் முதல்-மந்திரி பினராயி விஜயன், முன்னாள் மந்திரி கே.டி.ஜலீல் உள்ளிட்டோருக்கும் பங்கு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதற்கிடையே, இந்த வழக்கில் ஜாமீனில் இருக்கும் ஸ்வப்னா சுரேஷ், தான் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளிக்க விரும்புவதாகக் கூறினார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளியிடப் போவதாகவும் கூறினார். இந்நிலையில், ஸ்வப்னா சுரேஷ் இன்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கில் முதல் மந்திரி பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, அவரது மகள், பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோருக்குத் தொடர்பு உள்ளது என தெரிவித்தார்.